Ad Widget

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து நீக்கம்

Kamalஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 16 ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முடிவிற்கு அமைய அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாக செயலாளரினால் கடந்த ஜனவரி 29ஆம் திகதி யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக கடிதம் மூலம்; கமலேந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்ஷிசனை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றின் உத்தரவின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவுடன் எமது கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், உங்களது கட்சி அங்கத்துவம் ஏற்கனவே செயலாளர் நாயகத்தினால் இடைநிறுத்தப்பட்டிருகின்றது.

இந்த சூழ்நிலையிலும் எமது மத்தியகுழு கடந்த 23.12.2013 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தின் போது, ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், கட்சியின் செயலாளர் நாயகத்தினால் ஏற்கனவே இடைநிறுத்திய தீர்மானமும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டின் காரணமாக எமது கட்சிக்கும், தலைமைக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அபிமானிகள் யாவருக்கும் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும், அவமானங்களையும் களையக்கூடிய வகையிலும், பொது மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு அரசியல் ஸ்தாபனம் என்ற முறையில் எமது கட்சியின் நற்பெயரையும், மக்கள் அபிமானத்தினையும் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் கருதியும் உங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாக, உங்களை எமது கட்சியின் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென எமது மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதென்பதனையும் கடிதம் மூலம் அறிவிக்கும்படி மத்தியகுழு என்னை பணித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தின் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதென ஜனவரி 16 ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்ததின் அடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்துவத்திலிருந்து மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில், உடனடியாக கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தினை உங்களுக்கு அறியத்தருகின்றோம்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts