Ad Widget

கமலேந்திரனை வைத்து கட்சியை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது – டக்ளஸ்

dak-thevananthaaaநெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று நான் உத்தரவினை வழங்கியிருந்தேன். ஆனால் இது தனிப்பட்ட நபரின் பிரச்சினை. சில ஊடகங்கள் கட்சியின் மீது குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது’ என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

‘இந்தச் சம்பவம் கட்சியின் கொள்கையோ கோட்பாடோ அல்ல. இது ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினை. தென்னிலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் சுடப்பட்ட போது, அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சியின் மீது குற்றச்சாட்டு வரவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரனின் பிரச்சினையினை கட்சியின் பிரச்சனையாக காட்ட சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

பல்வேறு வழிகளில் தற்போது ஆயுதங்கள் கிடைக்கின்றன. அவ்வாறானதொரு வழியில் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்று இந்தக் கொலைச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம். அண்மையில் யாழில் கைது சய்யப்பட்ட ஆவா குழவிடமிருந்து கூட இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

எனவே ஆவா குழு வந்தாலும் கமல் குழு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்தியாவுக்கு செல்லலாம், திரும்ப முடியாது

‘இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் படகு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தீர்கள். இப்போராட்டம் முன்னெடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இப்பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் கலந்துகொள்வேன். அத்துடன், இப்பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறுமாகவிருந்தால் நான் அங்கு செல்ல முடியாது. அவ்வாறு நான் சென்றாலும் திரும்பி வரமுடியாது. அது ஒருவழிப்பாதை என்பது உங்களுக்கு புரியும்’ என்றார்.

ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியில்

ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீதுள்ள (ஈ.பி.டி.பி. கட்சி மீது) காழ்ப்புணர்ச்சிகளை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றன.

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் பேசப்படுகின்றன. ஐ.நா. அமர்வுக்கு முன்னர் இலங்கையை சர்வதேசம் பல்வேறு கோணங்களில் பார்க்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைகளை சர்வதேச நாடுகள் கொண்டுவரப் போகின்றன என்று கூட்டமைப்பு மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை முன்வைத்தது.

அதாவது இம்முறை கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு சர்வயோக நிவாரணி என்றெல்லாம் கூட்டமைப்பு சொல்லி வந்தது. ‘அழுதாலும் அவளே பிள்ளையைப் பெறவேண்டும்’. ஒரு பிள்ளையைப் பெறுவதற்கு சர்வதேசம் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாமே தவிர பிள்ளையைப் பெறமுடியாது என்ற யதார்த்தத்தை கூட்டமைப்பு புரிந்து கொள்ளவில்லை.

ஜெனீவா தீர்மானத்திற்கு பின்னர் மக்கள் தங்களை தவறாக புரிந்துகொள்ளப் போகின்றார்கள் என்பதற்கான முதலைக் கண்ணீர் வடித்து சர்வதேசம் எங்களை ஏமாற்றி விட்டாதாக தற்போது தெரிவித்து வருகின்றார்கள். ஆனால், மக்களுக்கு சரியான கருத்தைச் சொல்ல வேண்டிய தேவை எமக்குள்ளது.

எங்கள் கட்சி (ஈ.பி.டி.பி) மீது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் தங்களுக்கு இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார்கள். இது உண்மைக்குப் புறம்பானது பக்கச்சார்பான விடயம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எமது கட்சி தொடர்பில் வெளியான கருத்து தொடர்பில் நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சித்தோம். அத்தோடு எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களைத் தவிர நாங்கள் ஏனையவற்றை வரவேற்றதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அந்த அறிக்கையைக் கொண்டு சர்வதேச நாடுகள் எங்கள் மீது தவறான சிந்தனையைக் கொண்டுள்ளன.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதோடு, இலங்கைக்கு வந்தபோது எமது நிலைப்பாடு தொடர்பில் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் அக்கறையில்லாத சிலர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தீர்வு வழங்க வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். ஆகவே கூட்டமைப்பும் தெரிவுக்குழுவில் இணைந்து தமது கருத்தை முன்வைக்க வேண்டும்’ என்றார்.

Related Posts