Ad Widget

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! – ஆட்சியமைக்கிறது லிபரல் கட்சி

கனடாவில் நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆறு ஈழத் தமிழர்களில் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றிபெற்றுள்ளார். ராதிகா சிற்சபைஈசன் உள்ளிட்ட ஏனைய ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதேவேளை, இம்முறை 189இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று லிபரலி் கட்சி ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது.

gary-anandasangaree

ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி 294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி 7,780 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான சக்திகுமார் 1317 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஸ்காபரோ நோர்த் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்தமுறை வெற்றி பெற்ற ராதிகா சிற்சபைஈசன் இம்முறை தோல்வியடைந்துள்ளார். அவர் 3,850 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார்.லிபரல் கட்சி வேட்பாளர் சான் சென் 7,647 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கொன்சர்வேட்டிவ் வேட்பாளர், ரவிந்தர் மால்கி 4,748 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

ஸ்காபரோ தெற்மேற்கு தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான ரொசான் நல்லரத்தினம்,2369 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்த தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா என்ற ஈழத்தமிழர்,1,085 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இங்கு லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். செந்தி செல்லையா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை.

அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் லிபரல் கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. லிபரல் கட்சி 189 தொகுதிகளிலும், ஆட்சியில் இருந்த கொன்சர்வேட்டிவ் கட்சி 102 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கட்சி 32 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன.

Related Posts