Ad Widget

கதிர்காமத்தில் யாத்திரிகர்களிடம் வியாபாரிகள் பகற்கொள்ளை!

நீண்ட விடுமுறை காலமாக கதிர்காமத்தில் என்றுமில்லாத அளவுக்கு யாத்திரிகர்கள் குவிந்துள்ளதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தமது இஷ்டம்போல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

சாதாரண அப்பம் 40 ரூபா (அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சபட்ச விலை 10 ரூபா) பிளேன்டீ 50 ரூபா, கருவாட்டுடன் கூடிய சாதாரண சாப்பாட்டுப் பார்சல் 250 ரூபா, ஓர் அங்குள உயரம்கொண்ட தயிருடனான தயிர்ச்சட்டி 180 ரூபா என அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன், வழக்கமாக 3 தொடக்கம் 4 ஆயிரம்வரை நாள் வாடகைக்கு விடப்படும் தங்கும் அறைகள் 12 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம்வரை அறவிடப்படுகின்றன. ஓலையால் வேயப்பட்டு தற்காலிகமாக மின்சார பல்பொன்றைத் தொங்கவிட்டுள்ள பாதுகாப்பற்ற அறைகளின் ஓர்இரவுக்கான வாடகை 34 ஆயிரம் ரூபாவாக உள்ளது. கதிர்காமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள குடிசைகள், வீடுகள், தாழ்வாரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் யாத்திரிகர்கள் நிரம்பிவழிகின்றனர்.

புத்தம் புதிய வாகனங்கள் கதிர்காமத்தில் நிரம்பி வழிகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. அத்துடன், கோவில்களில் பூஜைசெய்வதற்கு பூஜைத் தட்டுகளுடன் வரும் அடியார்கள் நீண்ட வரிசைகளில் நில்லாமல் முன்னாள் சென்று புகுந்துகொள்ள ஆயிரம் ரூபாவை கட்டணமாக அறவிடும் தரகர்களும் (புரோக்கர்களும்) அங்கு கோலோச்சி வருவதாகத் தெரியவருகின்றது.

Related Posts