Ad Widget

கதிரை சின்னத்தில் மஹிந்த?

இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற கேள்விகள் இலங்கை அரசியலை ஆக்கிரமித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளராகி பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவாரென்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

rajapaksa_mahintha

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்கலாம். ஆனால், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கும் மஹிந்தவின் விருப்பமும் அவரை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில அணியினரும் சற்று தளர்ந்துள்ள நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தங்காலையில் மஹிந்தவின் வீட்டுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பிக்கள் 37 பேர் உட்பட 60 இற்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மஹிந்தவின் எதிர்கால அரசியல் வியூகங்கள் தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

பிரதமராகவும், இரண்டு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மஹிந்த பொதுத் தேர்தலில் சாதாரண வேட்பாளராகக் களமிறங்குவதை விரும்பவில்லை என்றும், அதேவேளை சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காமல் போனால் தினேஷ் குனவர்தவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிடலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏ.எஸ்.பி. லியனகேயின் இலங்கை தொழிலாளர் கட்சியை மஹிந்தவுக்கு வழங்க தயாராக லியனகே இருப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்சியில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அத்தோடு மஹிந்தவை ஆதரிக்கும் எம்.பிக்களுக்கும் பொதுத் தேர்தலில் வேட்பு மனு சுதந்திரக் கட்சியில் நிராகரிக்கப்பட்டால் அவர்களாலும் மேற்கண்ட கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.

இவ்வாறானதொரு நிலையிலேயே மக்களுக்கு நன்கு பரிச்சயமான பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவருகின்றது. இம்முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன பதவி வகிக்கின்ற நிலையில் அதற்கான ஒப்புதலை வழங்க அவர் தயாராகவே இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறானதொரு அரசியல் சூழ்நிலை உருவாகுமானால் மஹிந்த பிரதமர் வேட்பாளராகவும் அவரை ஆதரிப்பவர்களும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக களமிறங்குவதற்கு மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Related Posts