Ad Widget

கண்ணீர் விட்டழுத இந்திய மீனவர் : ஊர்காவற்றுறையில் சம்பவம்

எங்களுக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை நாங்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றோம் எங்களை விடுவியுங்கள் என யாழ். சிறையில் உள்ள இந்திய மீனவர் ஒருவர் மன்றில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கடந்த 2ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 9 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீனவர்கள் சார்பில் ஏதாவது மன்றில் கூற உள்ளீர்களா என கேட்டிருந்தார். அதன்போது மீனவர்களில் ஒருவர் கண்ணீர் மல்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உங்களுடைய வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளோம். அங்கிருந்து பதில் கிடைத்ததும் விடுதலை செய்வோம் என்று நீதவான் தெரிவித்திருந்தார்.

மேலும் உணவு விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலையினருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை , 15 வயது சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதால் அவரை அரச சான்று பெற்ற பாடசாலையில் சேர்க்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts