Ad Widget

கண்ணீர்விட்டு அழுவதற்கும் முடியாத நிலையே எங்களுக்கு ஏற்பட்டுள்ளது – மாவை

தமிழர்களின் போராட்டங்களை – விடுதலையை எதிர்கால சந்ததிகள் அறிய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோமோ என்று இருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நீதிமன்றத் தடையை பொலிஸார் பெற்றுக் கொண்டதன் இளம் சமுதாயமும் உலக நாடுகளும் எங்களுடைய போராட்டங்கள் தொடர்பாக இங்கு நடந்தவையை அறிந்துள்ளது என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு கண்ணிர்விட்டு அழுவதற்கும் சந்தர்ப்பம் அற்ற நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் “கோப்பாய் கோமகன்” என்று அழைக்கபடுபவருமான அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவுதினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதி தலைவர் அ.பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகளினாலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களே இந்த நாட்டை ஆளுகின்றார்கள். அவ்வாறான கட்டமைப்புக்குள்தான் நாம் வாழவேண்டிய நிலைக்குள் இருக்கின்றோம்.

எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதற்கு இந்த அரசு பொலிஸார் ஊடாக நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளது. இந்த தடையினால் கண்ணிர்விட்டு அழுவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நோயினால் இறந்ததாக பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள். இந்த நாட்டில் முதலில் ஆயுதம் எடுத்து போராடிய ஜேவிபியில் இருந்தவர்கள் தற்போது அமைச்சரவையில் இருக்கிறார்கள். இது மட்டுமன்றி விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறிப்பாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் உள்ளனர். அவர்கள் இன்று குற்றமற்றவர்களாம்.

20ஆவது திருத்தச் சட்டவரைவை நிறைவேற்றுவதன் மூலம் இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் வேளையில் எங்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள். நீதிமன்ற தடைகள் மூலம் நீதியை ஏதிர்பாக்கும் எங்களுக்கு நீதியும் இல்லை, கண்ணீர்விட்டு அழுவதற்கும் எங்களுக்கு வழியும் இல்லாத நிலையில் வாழுகின்றோம்.

அமரர் வன்னிய சிங்கம் போன்றவர்கள் ஒற்றுமையாக இருந்து மக்களின் விடுதலைக்காக போராடியவர். அவர் வழியில் நாமும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையை அடைய வேண்டும் – என்றார்.

Related Posts