Ad Widget

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கடந்த காலங்களில் வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கில கல்வியைப் பெறுவதில் இடர்ப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கல்லூரிகளின் சாதனைகள் அண்மைக் காலமாகச் சரியத் தொடங்கியுள்ளன. அவற்றைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு. தற்போது க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் 18 சதவீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே, மாணவர்களுக்குக் குறித்த பாடத்துறைகளில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான கற்பித்தல், கற்றல் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிப்பதனூடாக இவ் அடைவுமட்டத்தை விரைவில் எட்டமுடியும் என்று நம்புகின்றோம்” என்றார்.

“இன்று எம் இளைஞர்களின் மனம் ஒருநிலையில் இல்லை. வெளிநாடு செல்வதா? வேண்டாமா? என்பதே பலரின் மனதில் எழும் எண்ணம். இவ்வாறான எண்ணத்துடன் வாழ்வதால் எம்மக்களுக்குச் சேவை புரிய உங்களுக்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவவிட வேண்டிவரும். உங்கள் மனம் வேற்றுநாட்டைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் எம்மாணவ, மாணவியருக்குத்தான் அதன் பாதிப்பு தெரியவரும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் நியமனத்தில், தரம் 6 முதல் தரம் 11 வரை நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்குப் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 315 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. அதாவது, கணித பாடத்துக்கு 86 பேருக்கும், விஞ்ஞான பாடத்துக்கு 152 பேருக்கும், ஆங்கில பாடத்துக்கு 77 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts