Ad Widget

கணவரைக் கொன்றவரைப் பழிவாங்குவதற்காக கூலிப்படை வைத்து கொலை செய்த வயோதிபப் பெண்! வெளிப்பட்டது கல்லுண்டாய்வெளி கொலை மர்மம்!

தனது கணவரைக் கொன்றவர் எனக் கூறப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக அந்த நபரின் தம்பியை கூலிப்படையை ஏவிக் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் சின்னத்தம்பி பாக்கியம் (வயது 63), கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் பெரியதம்பி நிசாந்த் (வயது 21), ஜெகநாதன் ஜெகதீபன் (வயது 26) ஆகியோராவர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:-

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் நாகராசா பார்த்தீபன் (வயது -30) என்ற இளம் குடும்பஸ்தர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தென்மராட்சி மந்துவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் ஜூலை 14 ஆம் திகதி இருவரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரதான சந்தேக நபரான பெண்ணையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் பொலிஸார் நீதிமன்றின் அனுமதியுடன் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் ஆனைக்கோட்டையில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது அவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த பெண்ணின் கணவரை கொலையானவரின் அண்ணன் தகராறு ஒன்றின் போது அடித்துக் கொன்றார் எனக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு தென்மராட்சி மந்துவில் பகுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கொலை செய்தவர் எனக் கூறப்படுபவரின் குடும்பத்தாரைப் பழிவாங்குவதற்காகவே அவரின் தம்பியை குறித்த பெண் கூலிப் படையை வைத்துக் கொலை செய்தாராம் என சொல்லப்படுகின்றது.

இதற்காக குறித்த பெண் கூலிப்படைக்கு 5 லட்சம் ரூபாவை வழங்கினார் என்றும் அவர்கள் கொலையான நபரை ‘நைஸா’கப் பேசி கல்லுண்டாய் வெளிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்றனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாகப் பொலிஸார் கூறினர்.

கைதான சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts