Ad Widget

கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயத்தினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார் – முதலமைச்சர்

vickneswaran-vickyகட்டுப்பாடுடைய மாணவ சமுதாயம் ஒன்றினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார். அதனை செயற்படுத்த மாணவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் இராமநாதன் கல்லூரியில் வைத்து தெரிவித்தார்.

இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தையர் எதிர்பார்ப்புடன் கட்டிய இந்தக் கல்வி நிறுவனம் இன்று நூறாண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது எனும் போது பெருமையாக இருக்கின்றது. இங்கு தான் என் தாயார் இளம் பெண்ணாகத் தன் உறவினரான இதன் ஆரம்ப கர்த்தாவான சேர் பொன் இராமநாதனிடம் நிலத்தில் வீற்றிருந்து அன்னாரின் வாயிலிருந்து பிறந்த அழகுச் சொற்களைச் செவிமடுத்தார் என்று நினைக்கும் போது மயிர் கூச்செறிகின்றது.

இந்தக் கல்விக்கூடம் இந்த நூறு வருடங்களில் எத்தனை எத்தனை சிறந்த மாணவியரை உலகுக்கு அளித்துள்ளது. எத்தனை சிறந்த தமிழ்ப் பேசும் மக்களின் தாயார்கள் இங்கு தமது ஆரம்பக் கல்வியைக் பெற்றார்கள் என்றெல்லாம் எண்ணும் போது எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற முதுமொழியின் முழு உண்மையையும் முற்றாகக் கிரகிக்க முடிகின்றது.

மேலும் நூற்றாண்டுகள் காலம் இந்தக் கல்லூரி சீருஞ் சிறப்புடனும் வளர்ச்சி பெற வாழ்த்துகின்றேன். பெண்களுக்கான கல்லூரிகளை உருவாக்கிய போது சேர் பொன் இராமநாதன் அவர்கள் முக்கியமாகக் கருதிய விடயங்கள் சில இருந்தன. அதன்படி அதில் முதலாவது, ஆண்களின் கல்வி தனி ஒருவருக்கேநன்மை பயப்பதாகும். ஆனால் பெண்களுக்குக் கல்வி புகட்டப்பட்டால் முழுக் குடும்பத்திற்கும் அது நன்மை பயக்கும் என்பது.

இரண்டாவது, குடும்பப் பாரத்தினுள் பெண்கள் சிறைபட்டுக் கிடப்பதில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதென்றால் அவர்களுக்குக் கல்வி என்ற ஒரு கவசமும், அடையாளமும் தேவை என்று அவர் உணர்ந்து கொண்டமை.

மூன்றாவது, அழிந்து போகும் உலகாய அறிவை மட்டும் போதிக்காமல் அன்பையும், அரவணைப்பையும், அழியாத பண்புகளையும் அறிவிக்கக் கூடிய பாடங்களைப் போதிக்க வழி செய்ய வேண்டும் என்ற அவரின் அவா. எனவே தான் முதலில் அவர் பெண்களுக்கான கல்லூரி ஒன்றினைக் கட்டி முடித்தார்.

அதன் பின்னர் தான் ஆண்களுக்கான பரமேஸ்வராக் கல்லூரி கட்டப்பட்டது. இந்த இராமநாதன் மகளிர் கல்லூரி கட்டப்பட்டு இன்று நூறு வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. பல இன்னல்கள், இடைஞ்சல்களுக்குள் இந்தக் கல்லூரி தலை நிமிர்ந்து நிற்கின்றதென்றால் அது எமது அதிர்ஷ்டமே. மாணவ மாணவியரை நற்பிரஜைகள் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். ஓரளவுக்கு அது நடந்தேறியுள்ளது எனலாம்.

உலகின் எல்லாப் பாகத்திலும் இங்கு கற்றுத் தேர்ந்த மகளிர் சுய கௌரவத்துடனும், தன்நம்பிக்கையுடனும் நற்பிரஜைகளாக வாழ்ந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு எங்கள் மகளிர்கள் முன்னேறியுள்ளார்களா என்பதை ஆராய்ந்தே அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மாணவ சமுதாயம் உலகாய அறிவில் மட்டும் திளைக்காமல் இறைவன் பாற்பட்ட அறிவையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. எனவே இந்து, பௌத்த, கிறீஸ்தவ, இஸ்லாமிய சமயக் குரவர்கள் எல்லோருமே உலகாய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவதால் ஏற்படும் பரிதவிப்புக்களை உணர்ந்து, இறைவன் சார்பான எண்ணங்களை, ஈடுபாடுகளை விருத்தி செய்ய மக்கள் முன் வரவேண்டும் என்ற கருத்துத்தையும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

நல்வாழ்க்கை என்பது எங்கோ மேகங்களுக்கப்பால் இருந்து கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் அன்று. அதனை நாம் இவ்வுலக வாழ்க்கையிலேயே பெற வேண்டும். இன்றைய இந்த உலகாய சூழல்களில் கூடப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெறுவதென்றால் எமது மாணவ மாணவியர்க்கு நவீன கலாசாரத்தை உட்புகுத்தி பாரம்பரிய கலாசாரத்தைத் தொலைக்க வைத்த நாம், மீண்டும் எமது பாரம்பரிய விழுமியங்களை மாணவ சமுதாயத்திற்கு விதந்துரைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் சேர் பொன்னம்பலம் இராமநாதன்.

அதாவது நாளை அழிந்து போகும் பொருட்கள் பற்றிய அறிவு ஓரளவு தேவையென்றாலும் அதற்கு அப்பால் பெற வேண்டிய கல்வி ஒன்றுண்டு என்ற கருத்துடன் அவர் இருந்தார். அதாவது அழிந்து போகக்கூடிய எமது உடல்களுள் அழியாத ஏதோ ஒன்று இருப்பதை மாணவ மாணவியர்க்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் பிரியப்பட்டார்.

ஆகவே ஆத்மா பற்றிய அறிவு முக்கியம் என்ற கருத்துடையவராக இருந்தார். இந்த எண்ணம் எம் மாணவ மாணவியரிடையே எழாமல் இருந்தால் அவர்கள் சுயநலத்திற்கும், புலன் சார்பான அவாக்களுக்கும் அடிமைகள் ஆகி விடுவார்கள் என்று நம்பினார். அதாவது சமய சார்பான அறிவை மாணவ, மாணவியர்க்குப் புகட்ட வேண்டும் என்று கருதியே அவர் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கல்லூரிகள் கட்டி வைத்து விட்டுச் சென்றார்.

கல்லூரிகள் மாணவ மாணவியர்க்கு வேலைகள் தேடித்தரும் கல்வியை மட்டும் புகட்டிவிட்டு அவர்களின் ஆத்மீக விருத்திக்கு ஏதும் செய்யாது விட்டால் மாணவ மாணவியர் அன்பும், பண்பும் கொண்டு வாழ முற்படமாட்டார்கள். மாறாக அகந்தையின் பாலாகத் தம்மை முன்னிறுத்தி, சுயநலத்துடன் மற்றவர்களை எதிர்த்து,அவர்களை வீழ்த்தி மேலெழவே அவர்கள் உத்தேசிப்பார்கள். எனவே அன்பும், ஆத்மீகமும் அவ்வாறான ஒரு நடத்தையைக் கட்டுப்படுத்தி சுமூகமான ஒரு வாழ்க்கையை வாழ வழி வகுப்பன. நல்ல மாணவ மாணவியர் தமது நடத்தை, பண்பு போன்றவை பற்றி கவனம் செலுத்துவார்கள். செய்தொழிலைச் சிறப்பாகச் செய்ய முன் வருவார்கள். இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணத்தில் உறைந்திருப்பார்கள் என்று அவர் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார்.

மேலும் கட்டுப்பாடு உடைய மாணவ சமுதாயமாக வளரவே சேர் பொன் இராமநாதன் பாடுபட்டார். அத்துடன் தாம் பிழையான நடத்தைகளில் ஈடுபட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்ற பாடத்தை மாணவ சமுதாயத்திற்கு ஊட்ட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். மேலை நாடுகளின் உலகாய நவீனக் கல்வியையும், கீழை நாடுகளின் பாரம்பரியப் பண்பாட்டு விழுமியங்களையும் ஒருங்கே மாணவ சமுதாயத்திற்குப் புகட்டவே அவர் இந்தக் கல்லூரிகளைத் தாபித்தார். எமது மகளிர் மாணவச் சமுதாயம் உங்கள் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறியதால் இப்பேர்ப்பட்ட மேற்கையும், கிழக்கையும் சேர்த்து வைக்கும் ஒரு கூட்டிணைந்த கல்வியை எந்த அளவுக்குப் பெற்றுள்ளார்கள். அதன்படி இது குறித்த உங்கள் மாணவிகளுக்குத் தான் முற்றாகத் தெரியும், புரியும்.எனினும் அவர் கனவு நனவாகியுள்ளது என்றே நான் கணிக்கின்றேன். வருங்காலத்தில் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு முழுமையான மாணவ கல்விச் சமுதாயத்தை இராமநாதன் கல்லூரி உருவாக்கிச் செல்லும் என்பதில் எனக்கு எள்ளளவுஞ் சந்தேகமில்லை.

நீங்கள் தவற எத்தனித்தாலும் சேர் பொன் இராமநாதனின் ஆத்மா உங்களைப் பிழையான வழியில் செல்ல இடங் கொடுக்காது. உங்கள் கல்லூரி போர்க்காலத்தில் மிகவும் பாதிப்படைந்துள்ளது போலத் தெரிகின்றது. விரைவில் எமது இடம்பெயர்ந்த வெளிநாட்டுத் தமிழ் மக்களின் உதவியுடன் நீங்கள் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா

Related Posts