கட்டாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் அமைந்துள்ள நாட்டின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு செயலாக்க மையத்தில், இந்த தொழில்நுட்ப விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது ஒரு விபத்து மட்டுமே என்றும், இதில் எவ்வித சதித்திட்டங்களோ அல்லது விரோதச் செயல்களோ உள்ளடக்கப்படவில்லை என்றும் கட்டாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இந்த வெடிப்புச் சம்பவம் நாட்டின் எரிவாயு ஏற்றுமதியைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஸ் லஃப்பான் துறைமுகமானது உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகமாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதி வசதியையும் கொண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஏற்பட்ட இந்த வெடிப்பின் அதிர்வுகள், 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோஹாவின் மத்திய பகுதி வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
எரிசக்தி அமைச்சர் அல்-காபியின் கூற்றுப்படி, பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக மையத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் அபாயம் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தபோதிலும், ஆலை எப்போது மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கும் என்பதைக் கணிப்பது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக 2025 டிசம்பர் முதல் இந்த ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததுடன், இரண்டு நாட்களுக்கு முன்பே மீண்டும் தொடங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.