Ad Widget

கட்சி பேதங்களுக்கப்பால் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் -டக்ளஸ்

கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி எமது மக்களை சுய பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வதற்கு கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரது ஒன்றிணைந்த ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியமானதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்தகால தவறான அரசியல் வழிநடத்தல்களால்தான் எமது சமூகம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் போருக்குப் பின்னரான தற்போதைய அமைதி சூழலில் மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் என்ன நேரத்தில் என்ன நடக்குமென்று தெரியாத அங்கலாய்ப்புடனும் ஏக்கத்துடனும் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்றுள்ளதான சூழல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோற்றுப்போனது தவறான அரசியல் வழிநடத்தலேயன்றி எமது சமூகமல்ல என்பதை உணர்ந்து கொண்டவர்களாக எதிர்காலங்களில் விழிப்புடன் மக்கள் செயற்பட வேண்டும்.

எனவே மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களுக்கான வாழ்வாதாரம் பெற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் கட்சி பேதங்களுக்கப்பால் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சரியான அரசியல் வழிநடத்தலின் ஊடாகவே மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அதற்காக நாம் எக்காலத்திலும் உழைத்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

Related Posts