Ad Widget

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்: ஈ.பி.டி.பி கோரிக்கை

எமது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கேஜெகன்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலங்களில் எமது கட்சியில் இருந்து கட்சியின் கட்டுப்பாட்டு ஒழுக்க விதிகளை மீறியவர்களும், சமூக மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் ஒருவரான அச்சுவேலியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை செல்வராஜா (லிங்கேஸ்) என்பவர் இன்னொரு கட்சியில் இணைந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வரும் இதேவேளை, எமது கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அறிகின்றோம்.

இது மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக எமது மக்களே எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று எமது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இன்னும் சிலர் தம்மை இன்னமும் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போல் அடையாளப்படுத்தி வேறு சில கட்சிகளின் சார்பாக தேர்தல் கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தமது விருப்பப்படி இன்னொரு கட்சி சார்ந்தோ, அன்றி தனித்துவமாகவோ செயற்படுவதற்கான ஜனநாயக உரிமையை நாம் என்றும் மதிப்பவர்கள். ஆனாலும் தமது அரசியல் செயற்பாடுகளின் போது தேவையற்ற முறையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதையோ அன்றி குழப்பகரமான செயற்பாடுகளில் ஈடுபடுவதையோ நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

ஆகவே, எமது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எமது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Related Posts