Ad Widget

கடைசி ஆசையைக் கூறியதால் கண்களை பிடுங்கினர்

இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது” என்றும் கூறினார்.

“கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒரு பகுதியினருக்கு ஒருவிதத்திலும் ஏனையவர்களுக்கு வேறு விதத்திலும் நீதித்துறையின் முன்னர் பார்க்கப்படுவதாக மக்கள் மத்தியில் எண்ணம் காணப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரின் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கூறுகையில், “நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். நாட்டின் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் நியாயமானதாக இல்லை” என தமிழ் மக்களிடம் எண்ணம் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு நெருங்கியவரான வின்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் நீதிபதிகளுக்கு சொகுசுக் கார் மற்றும் அதிக சம்பளம் வழங்கப்படும் போது அவர்களை அதனைவைத்து தாம் விரும்பியபடி தீர்ப்பு வழங்கச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது புத்தகம் தொடர்பில் யாரும் கேள்வியெழுப்பியிருக்கவில்லை. அந்தளவுக்கு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் உண்மைத் தன்மை காணப்பட்டது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான வழக்கில், குறிப்பாக, குமாரபுரம் படுகொலை வழக்கு, ரவிராஜ் கொலை வழக்கு என்பவற்றில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற எண்ணம் மக்களிடம் காணப்படுகின்றது.

விவசாயிகள் 354 பேர் பொலிஸாரின் கண்முன்னே 1954ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து இலங்கையில் படுகொலை கலாசாரம் ஆரம்பித்து, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை தொடர்ந்திருந்தது.

1983 ஆம் ஆண்டு தங்கத்துரை, குட்டிமணி மற்றும் ஜெகன் போன்றோரின் வழக்குகள் விசாரிக்கப்பட்ட போது, உங்களின் கடைசி ஆசை என்ன என்று நீதிமன்றம் கேட்டபோது, தமிழீழத்தை எமது கண்களால் காண வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதனால், குட்டிமணியின் கண்கள் சிறைச்சாலைக்குள் பிடுங்கி எடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது.

வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டவேண்டுமென நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நிலையின் அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது நீதித்துறையின் செயற்பாடு தொடர்பில் கேள்வியெழுப்பும் விடயமாகும்.

யுத்தத்தை வழிநடத்தியவர்கள் நாடாளுமன்றத்திலும் அமைச்சர்களாகவும் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகவும் உள்ள நிலையில், புலிகளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10, 14 வருடங்களாக அரசியல் கைதிகளாக இன்னும் சிறையில் துன்பப்படுகின்றனர். அவர்களுக்கு இன்றும் தீர்வு வழங்கப்படவில்லை.

இவர்கள் ஒரு வழக்கில் விசாரணை செய்யப்படும் போது, ஏனைய வழக்கிலும் தொடர்புள்ளதாக கூறி மீண்டும் தடுத்து வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான வழக்கில், தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 50 நாட்களுக்கு அதிகமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

தமிழ் மக்களின் சகோதரன் என்று கூறும் ஜனாதிபதியும் இவர்களுக்கு பதில் வழங்கவில்லை.

கடந்த வாரம் வடக்குக்கு வந்த சுகாதார அமைச்சரும் யத்தக் குற்ற விசாரணை நடக்காது, யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று கூறுவதுடன் ஏனைய அமைச்சர்களும் இதனைத் தெரிவிக்கின்றனர். இதனால்தான் நாம் சர்வதேச நீதிபதிகளின் விசாரணை வேண்டும் என்று சொல்கின்றோம். இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும்” என்றார்.

Related Posts