Ad Widget

விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன்- ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலை வைத்தியர்

விபத்துக்கு  உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை  அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து  தெரிய வருவதாவது ,
ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் காயமடைந்தனர்.
அதனை  அடுத்து மோட்டார் சைக்கிள் சென்ற இருவரும் ஊர்காவற்துறை பி.தர .ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சென்ற  போது அவர்களிடம் “நாம் விபத்தின் மூலம் யாருடைய  உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்த வில்லை  , சொத்துக்கும் சேதம் ஏற்படுத்த வில்லை ” என கடிதம் எழுதி  வாங்கியுள்ளார்.
பின்னர் இவர்களுடன் விபத்துக்கு உள்ளானவரிடம் சென்று “தனக்கு  ஒரு  பிரச்சனையும் இல்லை “என கடிதம் வாங்கி  வருமாறு பணித்தார்.
அதற்கு அவர்கள் தாம் அவ்வாறு  கடிதம்  வாங்கி  வர  முடியாது முதலில்  தமக்கு  காயத்திற்கு  சிகிச்சை அளிக்குமாறு  கோரியுள்ளனர்.
அதற்கு மறுப்பு  தெரிவித்த வைத்தியர் , கடிதம் வாங்கி  வந்தாலே  சிகிச்சை  அளிப்பேன் என  கூறியுள்ளார்.
இது  தொடர்பில் ஊடகவியலாளர்கள் எதற்காக  கடிதம் கோரினீர்கள் என  வைத்தியரிடம் கேட்ட போது  இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தவே கடிதம் கோரினேன்  என  தெரிவித்தார்.
அதற்கு ஊடகவியலாளர்கள் அவ்வாறு கடிதம் வாங்கும்  நடவடிக்கை ஏனைய வைத்திய சாலையிலும்  இருக்கின்றனவா என கேட்ட போது  ஆம்  அனைத்து வைத்திய சாலையிலும் அவ்வாறான நடவடிக்கை  இருக்கின்றது. என தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் விபத்துக்கு உள்ளானவர்கள் எங்கு சென்றும் முறைப்பாடு பதிவு செய்யலாம், தனக்கு  இராணுவம் மற்றும்  பொலிஸ் செல்வாக்கு  இருக்கின்றது எனவும்  தெரிவித்து  உள்ளார்.

Related Posts