Ad Widget

கடலோரப் பாதுகாப்புக்கு மத்தியில் கஞ்சா வடக்கிற்கு எவ்வாறு வருகின்றது; முதலமைச்சர் விக்னேஸ்வரன்

கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமைமையிலும் அதற்கு மேலதிகமாக கடற்படை, பொலிஸ், ஆகாயப்படை என மேலதிகப் படைகள் எம்மைச் சுற்றி வலம் வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சுயதொழில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதியில் இவ்வாறான பாதுகாப்பு, காவல்களையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனில், எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்கேயோ ஓட்டைகள் காணப்படுகின்றது என்பது புலனாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்து வருகின்றதோ எனச் சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,

போரில் ஈடுபட்ட படையினர் வட மாகாணத்தில் பல ஏக்கர் காணிகளில் தொடர்ந்து இருப்பது மக்களின் சுமூகமான, சுதந்திரமான வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

படிப்படியாக வட மாகாணத்தில் இருந்து படையினர் வாபஸ் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர்,

வடக்கிலுள்ள வனப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், வட பகுதியில் தமிழர்களுக்குரிய அடையாளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்காளர்களாலும் மற்றையோராலும் மறுக்கப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் இராச்சியம் அமைந்துள்ள பகுதியில் 12 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் அமைந்திருந்த சிவன் ஆலயம் உருக்குலைவின்றி மண்ணுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் இந்துக்களின் இருப்பிடம் எங்கு வரையெல்லாம் வியாபித்திருந்தது என்பதற்கு சான்றுகளாக விளங்குவதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts