யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி- ஊறணி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கடற்பகுதியில் கடற்தொழில் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் படையிரை கரையோரத்திலிருந்து வெளியேற்றுவது கடினம் எனவும், ஆனால் படையினருடன் இணங்கி மக்கள் கடற்றொழிலை செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 460 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தையிட்டி- ஊறணி பகுதியில் மீள்குடியேறும் மக்கள் தமது அடிப்படை வாழ்வாதார தொழிலுக்காக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை பகுதி விடுவிக்கப்படவேண்டும். என கேட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனிடம் நேற்றய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கரையோர பகுதியில் இருந்து படையினரை வெளியேற்றுவதென்பது கடினமான விடயம் என தெரிவித்துள்ள அமைச்சர், அதேவேளை படையினர் நினைக்கின்றார்கள். மக்கள் தங்களுடன் நெருங்கி ஒத்துழைப்புடன் வாழவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் படையினருடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதன் ஊடாக மக்கள் நன்மைகளை பெற்று கொள்ளலாம். அதற்காக படையினருடன் இணக்கப்பாட்டுக்கு வாருங்கள். என நான் கூற முடியாது தெரிவித்துள்ளார்.
படையினருடன் இணக்கப்பாட்டுக்கு வர விரும்புகிறார்களா? என்பதை மக்களிடம் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னதாகவே நாங்கள் எதனையும் பேசலாம்.
அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக படையினருடனும், மக்களுடனும் சந்தர்ப்பம் வருகின்றபோது பேசுவோம். என்றார்.
இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடுத்தகட்ட மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோது. அடுத்த கட்ட மீள்குடியேற்றம் தொடர்பாக எனக்கு சில கடிதங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைக்கு அடுத்தகட்டமாக எவ்வளவு நிலம் விடுவிக்கப்படும் என்பது தற்போது தனக்கு தெரியவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.