Ad Widget

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

கடற்படையினரின் வசமிருக்கின்ற முள்ளிக்குளம் காணிகள், வெகுவிரைவில் விடுவிக்கப்படும்’ என, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்தவில்லை. எனினும் புதிய அரசாங்கத்தினால், குறித்த முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட்டு, மக்களிடம் வெகுவிரைவில் கையளிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் காணிகளை முப்படையினர் அபகரித்திருந்தால், குறித்த காணிகளின் விவரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தல் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளை, கடற்படையினர் அபகரித்துள்ளமை தொடர்பான அறிக்கையினை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் குழுவுக்கு ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளோம். தற்போது, குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, கேப்பாப்பிலவு காணி தொடர்பாகவும் நாங்கள் பேசியுள்ளோம். குறித்த காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கான முயற்சிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது’ என்றும் அவர் கூறினார்.

Related Posts