Ad Widget

“கடற்படையினரை வெளியேறுமாறு மக்கள் கோரவில்லை” வடக்கின் உயர் அதிகாரி கொழும்பில் எடுத்துரைப்பு – முதலமைச்சர்

“முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேறுமாறு மக்கள் கோரவில்லை – அரசியல்வாதிகளே கோருகின்றனர் என வடக்கு மாகாண உயர் அதிகாரி ஒருவர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் உரக்கக் கூறியுள்ளார்.இவரைப்போன்றவர்கள் இருக்கும் வரையில் எம்மால் படையினரை வெளியேற்ற முடியாது”

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரால் ஊடகங்களுக்கு இன்று மாலை அனுப்பிவைத்த வாரந்திர கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் எமது மாகாண உயரதிகாரி ஒருவர் “கடற்படையினரை வெளியேற வேண்டும் என்று முல்லைத்தீவு மக்கள் கோரவில்லை. அரசியல் வாதிகளே கோருகின்றார்கள்” என்று கொழும்பில் போய்க் கூட்டமொன்றில் உரக்கக் கூறியுள்ளார்.

இவரைப்போன்றவர்கள் இருக்கும் வரையில் எம்மால் படையினரை வெளியேற்ற முடியாது. படையினரை வெளியேற்றாவிட்டால் வடக்கும் கிழக்காகிவிடும்.

எனவே எம் மத்தியில் இராணுவத்தினர் இருந்து ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி எல்லோருந் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பௌத்தர்கள் இல்லா இடங்களில் புத்த சிலைகளை நிறுவ உதவி புரிவது இராணுவம். மகாவலி சபையினருடன் சேர்ந்து சிங்கள குடியேற்றங்களை வடமாகாணத்தினுள் ஏற்படுத்துவது இராணுவம்.

தெற்கத்தையரைக் கொண்டுவந்து சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது படையினரே. இவ்வாறே தொடர்ந்து படையினர் வடமாகாணத்தில் நிலை கொண்டால் நடக்கப்போவது என்ன என்பதை நீங்கள் யூகித்து அறிய வேண்டும்.

பத்துவருடம் போதும் வடக்கைக் கிழக்காக்க. நிலமையை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களானால் இந்தத் தொடை நடுங்கிக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள்! – என்றுள்ளது.

Related Posts