Ad Widget

கடற்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை நீரியல்வளத் திணைக்களம் வழங்க மறுப்பது ஏன்?

தென்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு அங்கி வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததாலேயே அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களது உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலே சங்கத்தின் உபதலைவர் தவச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடற்தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பாக பல தரப்பினர்களிடத்திலும் முறையிட்டுள்ளனர்.

ஆனால் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனரென்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்கள் பலரதும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

குறிப்பாக இந்தப் பிரதேச மக்களை யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பல்வேறு அனர்த்தங்கள் தாக்கிய போதும் மீண்டும் அவர்களை இயற்கையும் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கூட பருத்தித்துறைப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தமொன்றின் போதும் இரண்டு மீனவர்கள் அந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் ஒரு மீனவர் கரையிலிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்.

இதேபோன்று தொண்டமானாற்றுப் பகுதியில் அதேதினம் மீனவரொருவரின் படகு கவிழ்ந்து அந்த மீனவர்களும் கரையில் இருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டதுடன் அவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன.

இதனைவிட நெடுந்தீவுப் பகுதியிலும் அண்மையில் படகொன்று விபத்துக்குள்ளாகி அப்பிரதேச கடற்தொழிலாளர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் இறப்பதற்குப் பிரதான காரணம் கடற்பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படாததாகும். ஆனால் தென்பகுதியில் இந்த கடற்பாதுகாப்பு கவசங்கள் அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் யாழ்.மாவட்டத்தில் ஒரு தொகுதி நீரியல் வளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தொகுதியைக் கூட கடற்தொழில் திணைக்களம் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு வழங்காது அதனை கடற்தொழில் திணைக்களத்திலேயே வைத்திருக்கின்றனர்.

ஆனால் அதனை வழங்கியிருந்தால் தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இவ்வாறு திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல் காரணமாக இந்த மீனவர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts