Ad Widget

கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய், வடமராட்சி இளைஞன் நண்பன் வீட்டில்

வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்படவில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் இருந்ததாகவும் பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி அவ்விளைஞனின் தந்தையினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், தனது மகன் தனக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னை 4பேர் கொண்ட கும்பல் வானில் கடத்திச் செல்வதாகக் கூறியதாக முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி இளைஞன் முள்ளிவளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று சென்று சரணடைந்ததுடன், தான் காணாமற்போனதாகக் பொய் கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முள்ளியவளைப் பொலிஸார் மேற்படி இளைஞனை பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பருத்தித்துறைப் பொலிஸார் மேற்படி இளைஞனை விசாரணை செய்த போது, தான் நடத்தி வரும் வியாபார நிலையத்தில் தனக்கு அதிகமான கடன்கள் இருந்தமையினால், தன்னைக் கடத்தியதாகக் கூறினால் கடன்காரர்கள் தன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்ற நோக்கத்தில் தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி முள்ளியவளையிலுள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

மேற்படி நபர் பொய் கூறியமை மற்றும் அவதூறான செய்தியினை ஊடகங்களில் பரப்புவதற்கு காரணமாக இருந்தமை தொடர்பாக மேற்படி இளைஞனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

வடமராட்சியில் இளைஞன் கடத்தல்

Related Posts