Ad Widget

கடந்த அர­சாங்­கத்­தின் என்­ரர்­பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசத இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன்களைப் பெற்றுத்தருவதாக குறிப்­பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கடன் திட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த அரசாங்கத்தில் நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் பயனற்றவையாகும்.

சாதாரண நடுத்தர மக்களுக்கு அக்கடன் திட்டங்களை எவ்வழிமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக எவ்விதமான உரிய வழிமுறைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தை குறிப்பிட வேண்டும்.

இக்கடன் திட்டத்தினால் மக்கள் எவரும் பயனடையவில்லை. அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கடன் திட்டம் முழுமையாக தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக கடன்களை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொள்ளும் நிதி மோசடி காரர்களிடம் பொது மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

வியாபார நடவடிக்கைகளுக்கு கடன் தேவையாயின் இடைத் தரகர்கள் எவரது உதவியையும் நாடாமல் நேரடியாக வங்கிக்குச் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். இலகுவான முறையில் கடன் பெற்றுக் கொள்வதற்கான வசதி தற்போது அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு சிறிய நடுத்தர வர்த்தக சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பை பெறும் நோக்கில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக கடன் நிவாரணத் திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts