Ad Widget

கடத்தப்பட்ட பெண் கிராம அலுவலர் மீட்பு!! : 08 பேர் கைது

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலர், இன்று வியாழக்கிழமை (21) வாகனத்தில் கடத்தப்பட்ட நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரங்களில் பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்ற கிராமஅலுவலரை வாகனத்தில் வந்தவர்கள் மறித்து, சகோதரனை அடித்துவிட்டு கிராமஅலுவலரை இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

இது தொடர்பில் ஊர் மக்கள் பிரதேச செயலகத்துக்கு அறிவித்ததையடுத்து, பிரதேச செயலர் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், தங்கள் வாகனங்கள் மூலமும் தேடுதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், இலக்கதகடு மறைக்கப்பட்ட துணி காற்றில் விலகியபோது, இலக்கத்தகட்டின் இலக்கத்தைக் குறித்து கொடிகாமம் பொலிஸாரிடம் கையளித்தார்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

கடத்தப்பட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பகுதியால் சென்றுகொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டது. இதன்போது வாகனத்தில் மயங்கிய நிலையில் இருந்த பெண் கிராமஅலுவலர் மீட்கப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து 8 பேரையும் கைது செய்தனர்.

கிராமஅலுவலர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமணம் செய்யுமாறு மேற்படி பெண் கிராமஅலுவரை நபரொருவர் தினமும் அச்சுறுத்தி வந்ததாகவும், இதனால் கடந்த ஒரு வார காலமாக சகோதரனின் மோட்டார் சைக்கிளில் கிராமஅலுவலர் சென்று வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related Posts