Ad Widget

கடத்தப்பட்டவர்களை மீட்டு தருவதாக கூறியவர் பொலிஸ் காவலில் மர்ம சாவு!!

கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது 57) எனும் நபர் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்டு தருவதாக கூறி , பாதிக்கப்படவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தி செல்லப்பட்டார்.

அவர் கடத்தபட்டு ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அவரது வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் கடத்தப்பட்டவர் வவுனியா யோசப் முகாமில் உள்ளதாகவும் அவரை மீட்க பணம் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டு ஒரு தொலை பேசி இலக்கமும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடத்தப்பட்டவரின் சகோதரன் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது கடத்தப்பட்டவரை மீட்க வேண்டும் எனில் பணம் தர வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு சகோதரன் சம்மதித்ததை அடுத்து வீட்டுக்கு சென்ற குறித்த நபர் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசியில் கடத்தப்பட்டவர் போன்று ஒருவர் வீட்டாருடன் உரையாடி உள்ளார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஒருவர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கோரியுள்ளார்.

அதற்கும் வீட்டார் சம்மதித்து உள்ளனர். முதல் தடவை வீட்டுக்கு வந்து பணம் பெற்று சென்ற நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று சென்று உள்ளார்.

அதன் பின்னர் குறித்த தொலைபேசி இலக்கம் தொடர்பற்று போனது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கடத்தப்பட்டவரின் சகோதரன் யாழ்.நகர் பகுதிக்கு தனது சொந்த வேலை நிமித்தம் வந்த வேளை யாழ்.நகர் பகுதியில் கடத்தப்பட்ட தனது சகோதரனை மீட்டு தருவதாக கூறி பணத்தினை பெற்று மோசடி செய்த நபரை கண்டு அவரை அங்குள்ளவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்ப்பாண பொலிசார் குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், முறைப்பாட்டாளர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவர் என்பதனால் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லபட்டார் .

அதன் போது வீதியில் பொலிசாரின் வாகனத்தை மறித்த இளம் பெண்ணொருவர் ஒரு பையினை கைது செய்யப்பட்ட நபரிடம் கொடுத்துள்ளார்.

அந்த பையினுள் போத்தல் ஒன்று இருந்துள்ளது. அந்த போத்தலினுள் இருந்த திரவத்தை குறித்த நபர் அருந்தி உள்ளார்.

அதன் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரை யாழ்ப்பாண பொலிசார் ஒப்படைக்க முயன்ற போது குறித்த நபரின் உடலில் மாற்றங்கள் காணப்பட்டதை அடுத்து அந்த நபரை தாம் பொறுப்பெடுக்க மாட்டோம் எனவும் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறும் அந்நபரை அழைத்து வந்த யாழ்ப்பாண பொலிசாருக்கு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அந்நபர் உயிரிழந்து உள்ளார்.

குறித்த நபர் காணாமல் போனர் மற்றும் கடத்தபப்ட்டவர்களை மீட்டு தருவதாக கூறி பலரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார் எனவும் , இராணுவ புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபரிடம் இருந்து தகவல்கள் எதுவும் வெளி வர கூடாது என்பதற்கான திட்டமிட்ட கொலையா இது என்பது தொடர்பில் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Related Posts