மருதங்கேணி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் இரண்டு மணிநேரமாக பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டது.
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் நேற்றையதினம் (21.06.2023) வாக்குமூலம் பெறப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரின் அழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பரமசிவன்(சிவா) ஆகியோர் குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் (02.06.2023)ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்ட கூட்டத்தில் புலனாய்வுப் பிரிவினைச் சேந்தவர் சென்றிருந்த நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காணொளிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியிருந்தன.
சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் செய்திகள், ஊடகங்களில் வெளியானமை தொடர்பாகவே குறித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.