Ad Widget

கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டும்!

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள திருவிழாவில், தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உறுதியளித்துள்ளார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை மீனவ பிரதிநிதிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும், வங்கிகளில் வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும், இலங்கை கடற்படை வசமுள்ள தமிழகத்தை சேர்ந்த 108 படகுகளை, டிசம்பர் மாதத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ள 15 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்ததாக மீனவப் பிரதிநிதிகள் கூறினர்.

கச்சத்தீவு அந்தோனியார் புதிய ஆலய திறப்பு விழாவில், தமிழர்கள் 100 பேர் பங்கேற்பதற்கான அனுமதி குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts