Ad Widget

கச்சதீவை மீண்டும் இந்தியாவிற்கு வழங்க முயற்சி – மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு

இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், கருத்து தெரிவிக்கையில்,

கச்சத் தீவு பகுதி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும் பரவலாக மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது.

இதனுடைய உண்மைத் தன்மையானது மீனவர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக செயல்படும் எங்களுக்கே இன்னும் தெரியாது. இருந்தாலும் இந்திய தரப்பினரால் தொடர்ச்சியாக இந்த கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

அதனோடு இணைந்து இன்றைய நாட்டின் சூழல் இலங்கையின் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தில் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் நிதியமைச்சராக இருந்தவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டினால் ஏதோ ஒரு விடயம் கச்சத்தீவு தொடர்பாக பேசப்பட்டு கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

இந்த கச்சத்தீவு இந்தியாவிற்கு வழங்கப்படுமாக இருந்தால் பாரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு உரிமை உள்ளதாக இருந்தபோது கூட இந்திய மீனவர்களால் வட பகுதி மற்றும் மன்னார் மாவட்ட கடல் பகுதி தொழில்ரீதியான ஆக்கிரமிப்பின் ஊடாகவும் ஏனைய கடத்தல் நடவடிக்கையில் ஊடாகவும் கடலில் உள்ள மீன் வளங்கள் அழிந்து, போதைவஸ்து கடத்தல் சம்பவங்கள் இங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்படப்போவது இலங்கை வட பகுதி மீனவர்கள் மட்டுமல்ல இந்த இலங்கை நாடு முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே இப்போது பொறுப்பேற்று இருக்கின்ற பிரதமர், அவரோடு இணைந்து செயல்ப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக வட பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கச்சதீவு விடயத்தில் அதிக கரிசனை எடுத்து இது இலங்கைக்கு சொந்தமானது என்பதை வலியுறுத்தி இலங்கை பொருளாதாரத்திற்கு எமது இறைமையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தீவுகளையும் விற்கும் நடவடிக்கையில் இறங்கினால் அதனை விட நாங்கள் மடிந்து போவது மேல் என்பதை இங்கு நான் பதிவு செய்து கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், மன்னார் மாவட்ட கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் ஜஸ்ரின் சொய்சா, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொருளாளர் அன்ரனி சங்கர், வடமாகாண இணையத்தின் உப தலைவர் பாலசுரேஸ் அச்சுதன், மன்னார் பிரதேச சமாசத்தின் தலைவர் ஜோகராஸ் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

Related Posts