Ad Widget

கச்சதீவை மீட்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு – சிவாஜிலிங்கம்

கச்சதீவை மீட்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் குரலை, நாம் மிகவும் பணிவுடன் ஆதரிக்கின்றோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

sivaji

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இம் மாதம் 6ம் திகதி வாழ்த்து கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாகவும் அதிலையே தான் அவ்வாறு குறிப்பிட்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வருக்கு தாம் எழுதிய வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டதாக அவர் கூறியதாவது,

இந்த வாழ்த்து மடலை இலங்கையின் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சி உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகிய நான் அனுப்பி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

இலங்கையில் நடைபெற்ற மிகக் கொடிய போர் முடிவுக்கு வந்த 2009ம் ஆண்டின் பின்னர், தாங்கள் தமிழ் நாட்டில் 2011ம் ஆண்டு பதவிக்கு வந்த பொழுது, இலங்கைத் தமிழர்களாகிய நாம் விடிவெள்ளி ஒன்று உதயமாவதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தோம்.

எமது எண்ணங்கள் வீண்போகவில்லை என்பதை நிரூபிப்பதைப் போல, அண்மைக் காலங்களில் நான்கு தீர்மானங்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டமை இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாகவே நாம் பார்த்தோம்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றியீட்டிதன் மூலம் ஒரு வரலாறுச் சாதனையைத் தாங்களும், தங்களின் கட்சியாகிய அ.இ.அ.தி.மு.கவும் படைத்துள்ளது. அது மாத்திரமல்ல, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பதன் மூலம் தங்களின் ஆளுமை இந்திய அரசியலில் ஒரு சகாப்பதமாக உருப்பெற்றுள்ளது.

இத்தைய வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் சார்பில், எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் அளவில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

தங்களுக்கும், தங்கள் கட்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றியானது, தமிழ் நாட்டினதும், இந்தியாவினதும், முன்னேற்றத்திற்கு மாத்திரமல்ல, இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்ல, 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி முல்லைத் தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் என்ற இடத்தில் செஞ்சோலை என்ற ஆதவற்ற சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை அரசின் விமானப் படையின் குண்டு வீச்சில் 63 மாணவிகள் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட வேளையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அ.இ.அ.தி.மு.வின் முன்னாள் அமைச்சர் அமரர் காளிமுத்துவை சென்னையில் சந்தித்து தங்களுக்கு விடுத்த வேண்டுகோளை, தாங்கள் ஏற்று, அனைத்துக் கட்சிகளும் தமிழ் நாடு சட்டப்பேரவையில் இறந்த மாணவச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியதை நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.

போர் தீவிரம் அடைந்த பொழுது, தாங்கள் சென்னை சேப்பாக்கத்தில் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரம் இருந்த பொழுது, (காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை) தங்களுக்கு பொன்னாடை வழங்கி, வணங்கி இலங்கைத் தமிழ் மக்களின் நல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான நான் தங்களுடன் மேடையில் முழு நாளும் இருந்ததையும் எண்ணி, தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல் வீரத்தை கண்டு வியத்தவன் என்பதைப் பணிவுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

2008ம் ஆண்டில் இலங்கை பாராளுமன்றத்தில் போர் பற்றி நான் உரையாற்றிய பொழுது, தொப்புள் கொடி உறவுகளான எம் தமிழ் நாட்டு மீனவர்கள் 700 பேரைத் துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையின் கொடூரச் செயலுக்கு என்றோ ஒருநாள் இலங்கை அரசு அதற்கான விலையை, மிகப்பெரிய பதிலடியை இந்தியாவிடம் இருந்து பெற வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தமையைத் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

கச்ச தீவை மீட்க வேண்டும் என்ற தங்களின் குரலை, நாம் மிகவும் பணிவுடன் ஆதரிக்கின்றோம், இத் தீவு இராமநாதபுர மன்னார்களின் ஆளுகையின் கீழ் இருந்ததையும், இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது 1619ம் ஆண்டு போர்த்துக்கீசர் படையெடுத்த பொழுது, சங்கிலிய மன்னனின் வேண்டு கோளின் படி இராமநாதபுரத்திலிருந்து படைகள் புறப்பட்டு கச்சதீவில் வந்து இறங்கிய பொழுது, யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ந்ததாக செய்திகள் கிடைத்தமையால் படைகள் திரும்ப வேண்டியதாயிற்று.

கச்ச தீவு தமிழர்களின் சொத்து. தமிழகத்தின் சொத்து. இந்தியாவின் சொத்து. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு, இலங்கைத் தமிழ் மீனவர்களினதும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று தங்களை பணிவன்புடன் வேண்டுகின்றேன்.

இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியை இம்மாதம் 3ம் திகதி புதுடில்லியில் தாங்கள் சந்தித்த பொழுது தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை கோரியது மாத்திரம் அல்ல, இனப்படுகொலைகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தது மாத்திரம் அல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன அபிப்பிராய. வாக்கெடுப்பு தமிழீழம் வேண்டுமா என நாடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தீர்கள்.

இலங்கைக்கு போத்துக்கீசர் வருவதற்கு முன்னர் தனியரசு நடாத்திய இறைமையும், நடைமுறை அரசு நடாத்திய இறைமையும், இனப் படுகொலையில் இருந்து காப்பற்றப்பட வேண்டிய இறைமையும் கொண்ட இலங்கைத் தமிழினத்திற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவை என்ற மிகச் சரியான தீர்மானத்தை எடுத்தமைக்காக தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வணங்குகின்றோம்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எமக்கு சர்வதேச நீதி தேவை நிரத்தர அரசியல் தீர்வும் இலங்கை தமிழர்களுக்குத் தேவை.

சர்வதேச சமூகத்தின் உதவியுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி (சமஸ்டி)யை எமது குறைந்த பட்ச கோரிக்ககையாக எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களின் மீதான இனப்படுகொலை தீவிரமாக நடைபெறுகின்றது. சிங்களக் குடியேற்றங்கள், நிலப்பறிப்புக்கள், இராணுவக் குடியேற்றங்கள், படைமுகாங்கள் என இன அழிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு செய்து கொள்ளப்ட்ட இந்திய – இலங்கை ஓப்பத்தத்தை முழுமையாக அமுல் படுத்த இலங்கை அரசு மறுத்து வருகின்றது. சர்வதேச ஒப்பந்தத்தையே மீறும் இலங்கை அரசின் நடவடிக்கை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை அரசின் 13 வது அரசியல் அமைப்புச்சட்டமான மாகாண சபைகள் சட்டத்தை எமது தமிழ்த் தலைவர்களான அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களே இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென 25 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்தமையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

13 வது அரசியல் அமைப்புக் சட்டத் திருத்தம் இலங்கைத் தமிழர்களால் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதப்பட்டதே அன்றி, நிரந்தரத் தீர்வு அல்ல என்பதே எம் அனைவரினதும் ஏகோபித்த நிலைப்பாடாகும்.

எமது குறைந்த பட்சக் கோரிக்கையை, இலங்கை அரசு உதாசீனம் செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகள் சபையின் மேற் பார்வையில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஒரு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பைக் கோருவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, உறுதியான, அழுத்தமான வேண்டுகோளை இந்தியாவின் பிரதமருக்கு தாங்கள் விடுத்ததன் காரணமாக, தங்களை உலகத் தமிழ் மக்களின் தலைவியாக கோடானுகோடி தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற இனிப்பான செய்தியை தங்களின் பாதங்களில் இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் சமர்ப்பிக்கின்றேன்.

தங்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் கிட்ட வேண்டும் என்றும், மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் தங்களை நெஞ்சார வாழ்த்துகின்றோம். என மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை அக் கடிதத்துடன் கடந்த 22ம் திகதி வடக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை வாழ்த்து கடிதத்துடன் இணைத்து இணைத்து அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts