Ad Widget

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டுகிறது சிறிலங்கா கடற்படை

பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கச்சதீவில் புகழ்பெற்ற அந்தோனியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

கச்சதீவில் உள்ள அந்தோனியார் தேவாலயம் மிகவும் சிறியதாகவும், வசதிகள் குறைந்ததாகவும் இருக்கும் நிலையில், அங்கு புதிய தேவாலயத்தைக் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபை, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

புதிய தேவாலயத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சழிறிலங்கா கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின், குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்ட குருமாரும் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்படை இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதற்கென கனரக வாகனங்களும், கடற்படையின் தரையிறங்கு கலங்கள் மூலம், கச்சதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னதாக நிறைவடையும் என்று சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

Related Posts