Ad Widget

ஓரளவுக்கு எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்

தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது என்றும் இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என பகிரங்கமாக கூறியுள்ளார். இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் இந்த நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என அவர் பகிரங்கமாக கூறுகின்றார்.

காணிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. காணாமல்போனவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.

அதேசமயம் ஓரளவுக்கு எமது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். காணாமல் போவோம் என்ற அச்சம் எங்களிடம் இல்லை. வெள்ளை வேன் அச்சம் தற்போது இல்லை. பழைய நிலைமை மாறியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எங்கள் மீது திணிக்கப்படும் அநீதி, புறக்கணிப்பு மாற வேண்டுமானால் ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளுக்கு வரவேண்டும். எங்கள் இறமையின் அடிப்படையில் அந்த அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகவேண்டும். அந்தந்த பகுதி மக்கள் அவர்களின் இறமைகளின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை மக்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts