Ad Widget

ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் காலப்போக்கில் இதுபற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார்.

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா, பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை கடந்த மே மாதம் 30ஆம் திகதி அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை அத்திகதியிலிருந்து அமுலாக்கப்பட்ட 06/2006 இலக்க பொதுநிர்வாக சுற்றரிக்கையின் பிரகாரம் மீளாய்வு செய்வதை வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படவேண்டும் என்பது வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டது.

2015ஆம் ஆண்டின் புதிய சம்பளக் கட்டமைப்பின் அடிப்படையில் முரண்பாடுகளை முழுமையாக நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி தனது வரவு – செலவுத்திட்ட உரையில் தெரிவித்திருந்தார்.

எனினும் புதிய சம்பளக் கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டாமையால் ஓய்வூதியக் முரண்பாடுகளைத் தீரக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞானபனத்தில் ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அவர்களுக்கு ஒரு இடைக்கால படியாக 3,500 ரூபாய் வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

இடைக்கால படியை வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் முரண்பாடுகளை நீக்குவதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நீண்டகாலமாக இருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு தாங்கள் எடுக்கும் துரித நடவடிக்கை நாடு பூராகவுமுள்ள ஓய்வூதியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்துக்கான பதில் கடிதத்திலேயே நீண்டகாலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், காலப்போக்கில் இது பற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Related Posts