Ad Widget

ஓய்வூதியர்களை நியமிப்பது தமிழ் தேசிய அரசியலுக்கு உகந்ததல்ல -வி.எஸ்.விவகரன்

election-meeting-candidateவடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயதானவர்களையும் ஓய்வூதியர்களையும் நியமிக்க கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறான ஓய்வூதிய அரசியல் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உகந்தது அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.விவகரன் தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர் தெரிவு தொடர்பில் அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘இம்மாகாண சபை முறையானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எந்தவிதத்திலும் தீர்வாக அமையாதபோதும், அதில் போட்டியிட்டு பிற நாசகார சக்திகளிடம் ஆட்சி பறிபோகாமல் தடுக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் வெற்றிபெறும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆயினும் பல கட்சிகளை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளிடையே ஆசனப்பங்கீட்டில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
அதில் ஒவ்வொரு கட்சிகளும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வேட்பாளர்களை நியமிப்பதில் அதிகமாக வயதானவர்களையும் ஓய்வூதியர்களையும் நியமிப்பதில் கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

துடிப்புடன் செயற்படக்கூடிய இனப்பற்றுடைய சோரம் போகாத தமிழினத்துக்கு உறுதியுடன் சேவையாற்றக்கூடிய தன்மான உணர்வுடைய இளைஞர்களுக்கு பெருமளவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கலாசார சீர்கேடுகள் அதிகரித்துள்ளமையும் கல்வி நிலையும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றமையும் இன்று எமது இளையோரின் முன்னாலுள்ள பாரிய சவாலாகக் காணப்படுகின்றன.

வயதானவர்களால் ஆலோசனை கூற முடியுமான சூழ்நிலையில் எமது இனத்தின் இருப்பினை தொடர்ந்து பேணும் வகையில் களத்தில் இறங்கி துடிப்புடன் செயற்படும் வகையில் இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருதல் மிக அவசியமாகும். முதியவர்களின் ஆலோசனையை உள்வாங்கி களத்தில் செயற்படத்தக்க வகையில் இத்தேர்தலில் இளையோருக்கு அதிகளவில் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

இளைய தலைமுறையை ஜனநாயகத்தின் பாதையில் பற்றுறுதி உடையவர்களாக்குவதற்கு இவ் வடமாகாண சபைத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டுமானால் இளைஞர்களின் நம்பிக்கையை வென்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இல்லாவிடில் அரசியல் என்பது முதியோர்கள் தொழில் என முடிவெடுத்த இளம் சமுதாயம் அரசியலில் பங்கேற்பு, வாக்களிப்பு என்பவற்றிலிருந்து விலகி இருக்கும் அபாயம் காணப்படுகின்றது. இதன் மூலம் தமிழினத்துக்கு எதிரான சக்திகள் இலகுவாக வெற்றி பெறக்கூடிய சிக்கலான சூழ்நிலையும் காணப்படுகிறது. இளையவர்களின் பங்களிப்பு இல்லாத மாகாண சபையானது அச்சாணி இல்லாத தேருக்கு சமமானதாகும்.

ஆகவே இவ் வடமாகமண சபைத்தேர்தலில் போரினால் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள இளைய சமுதாயத்தினை பிரதிநிதித்துவப்படுத்தவும் இளையோரின் சமூக வாழ்க்கை நிலையை அபிவிருத்தி செய்யவும் வேட்பாளர் பட்டியலில் இளையோருக்கு அதிக இடம் வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், கட்சியின் வெற்றிக்காக களத்தில் நின்று அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுத்து இலக்கை அடைவதற்கு வழிவகுப்பவர்கள் இளையோர்களே.

தமது வெற்றிக்காக கருவேப்பிலையாக இளையோரை பயன்படுத்துகின்ற நிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு இளையோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தவறுமாயின் இளையோர் தேர்தல் பணியில் இருந்தும் வாக்களிப்பிலிருந்தும் விலகியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், சமூக மாற்றத்தை தீர்மானிப்பவர்கள் இளையோரே ஆகும் என்பதை வலியுறுத்துகின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts