Ad Widget

ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்

தேசிய பரீட்சைகளாகிய புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஆகியன ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெற உள்ளமையால், தம்மைத் தயார்ப்படுத்தும் மாணவர்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் யாழ் குடாநாட்டில் உள்ள கோவில் திருவிழாக் கால ஒலிபெருக்கிகளைக் கட்டுப்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

பரீட்சைகளுக்குத் தாயராகும் மாணவர்களின் கல்வியை கோவில் ஒலிபெருக்கிகளின் கட்டுப்பாடற்ற சத்தம் சீர் குலைப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து இந்த முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளஞ்செழியன் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்குப் புதிதாக நியமனம் பெற்றுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நேரடியாக அறிவுறுத்தியுள்ளார்.

அந்த அறிவுறுத்தலில் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி பெறுபேறுகள் தேக்க நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள சூழலில், தேசிய பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை நீதிமன்றமும் பொலிஸாரும் ஏற்படுத்த வேண்டும்.

சட்டத்தை மீறி ஒலிபெருக்கிகள் தொல்லை கொடுக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டும் கண்ணால் கண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

குற்றவியல் நடவடிக்கை முறைகோவையின் 91 ஆம் பிரிவின் கீழ் பொது தொல்லை கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகின்றது,எனவே கோவில் திருவிழாக்களின்போது, ஒலி பெருக்கிகள் பூஜை நேரங்களில் மட்டும் சிறிதாகவோ பெரிதாகவோ குறுகிய கால நேரம் அனுமதிக்கப்படலாம்.

பூஜை நடைபெறாத மற்றைய நேரங்களில் ஒலி பெருக்கிகள் நிறுத்தப்பட வேண்டும் அல்லது கோவில் வளாகத்திற்குள் மட்டும் கேட்கக்கூடியதாக சத்தம் குறைக்கப்பட வேண்டும். அதேநேரம் பாடசாலைகள் நடைபெறும் நேரங்களிலும் மேலதிக வகுப்புக்கள் நடைபெறும் நேரங்களிலும் ஒலிபெருக்கிகள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சில கோவில்களில் திருவிழாக்களின் போது பூஜையுமில்லாத மக்களுமில்லாத நேரங்களில் காலையில் இருந்து இரவு வரையில் ஒலிபெருக்கிகள் பெரும் சத்தத்துடன் இயங்குகின்றன அவைகள் உடனடியாக அற்றப்பட வேண்டும்.

வீதிகளில் பொதுத்தொல்லைகொடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அனைத்து ஒலிபெருக்கிகளிலிருந்து சத்தம் எழுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொலிஸாரிடம் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்காக அனுமதி கோரும்போது,பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்காத வகையிலான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

எனவே பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவர்களின் கல்விக்குத் தொல்லை கொடுக்காத வண்ணம் யாழ் குடா நாட்டின் அனைத்து கோவில் நிர்வாகங்களும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பொது நலனுக்கு ஒத்துழைக்க வேண்டும் இதனை உறுதி செய்யும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts