Ad Widget

ஒற்றுமையை குலைக்க விரும்பாததால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டி – வி.ஆனந்தசங்கரி

anantha-sankaree-athatheranaவடக்கு மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒற்றுமையை குலைக்க விரும்பாததால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்து உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் அக் கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அக் கூட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ் .நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள கட்சியின் யாழ்.மாவட்ட காரியாலயத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, வேட்பாளர் தெரிவு மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடல் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், இதனால் எமது கட்சிக்கு ஒதுக்கப்பட ஆசனங்கள் குறைவாக உள்ளதால் எமது கட்சி சார்பாக வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பாரிய சிக்கல் உள்ள போதும் நாம் தனித்து போட்டியிட்டு ஒற்றுமையை குலைக்க விரும்பாததாலேயே நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தீர்மானித்து உள்ளோம்.

இக் கூட்டத்தில் நமது கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை எனவும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts