Ad Widget

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை காணவில்லை

யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், நேற்று (29) சாட்சியமளித்தார்.

சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது, தொடர்ந்து சாட்சிமளித்த அந்த முதியவர் கூறியதாவது,

‘எனது மகன் சத்தியமூர்த்தி, மருமகள் கவிதா, பேரப்பிள்ளைகளான தமிழ் முகிலன், தமிழ் அன்டன், இறைநிலா மற்றும் நான், வட்டுவாகல் பகுதியிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 2009 மே மாதம் 18ஆம் திகதி சென்றோம். இதன்போது, புலிகள் அமைப்பில் ஒருநாளேனும் இருந்தவர்களை வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் மரக்காலையில் முகாமையாளராக கடமையாற்றிய காரணத்தால் எனது மகன் சரணடைந்தார். அவரை விட்டு வரமாட்டேன் என மருமகளும் அவரது குழந்தைகளுடன் சென்றார். அவர்கள் ஐவரையும் பஸ் ஒன்றில் ஏற்றினார்கள். என்னை, முகாமுக்குச் செல்லுமாறும் விசாரணை முடிய தாங்கள் வருவோம் என்றும் கூறிச் சென்றனர். ஆனால் இன்றுவரை அவர்கள் திரும்பிவரவில்லை’ என்று சாட்சியமளித்தார்.

மகனின் கடிதம் வந்தது, மகன் வரவில்லை

இராணுவ முகாமில் இருந்து மகன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஆனால், மகன் இன்னமும் திரும்பி வரவில்லையென காணாமற்போன த.தவச்செல்வன் என்பவரது தாயார் சாட்சியமளித்தார்.

‘யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்றிய எனது மகன், கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று வேலைக்குச் சென்ற போது காணாமற்போனார். எனது மகனை செம்மணி முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்ததை கண்டதாக கிராமஅலுவலர் கூறினார். அதன் பிறகு மகனைக் காணவில்லை.

இரண்டு வருடங்களின் பின்னர் மகனிடமிருந்து கடிதமொன்று வந்தது. தான் ஒரு இராணுவ முகாமில் உள்ளதாகவும் கையில் சின்ன காயம் உள்ளது எனவும், தான் நலமாக உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தை யாருக்கும் காட்டவேண்டாம் என்றும் தனது படம் மற்றும் தனது நலம் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், அதன் பின்னர் கடிதமும் வரவில்லை மகனும் வரவில்லை’ என அந்தத் தாய் கூறினார்.

மகனைக் கொன்று புதைத்துவிட்டனர்

அரியாலை பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எனது மகனுடன் சேர்த்து 8 பேரை கொன்று புதைத்தாக கச்சேரி காட்டுக்கந்தோரைச் சேர்ந்த செல்லையா சந்திரசேகரன் என்ற முதியவரும் இதன்போது ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார்.

இதன்போது தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,

“எனது மகன் லோகேஸ்வரன், காவலாளியாக கடமையாற்றியவர். கடந்த 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதியன்று, வீட்டுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள், மகனையும் மேலும் 7 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்களை அரியாலை முகாமுக்கு அழைத்துச்சென்று சித்திரவதை செய்து கொன்று புதைத்துவிட்டனர். நான் முகாமுக்கு சென்று கேட்டபோது, ‘மகன் முடிஞ்சுது தேடாதே’ என்று என்னை விரட்டினர்.

எனது மனைவியும், இன்னொரு மகனும் விமானக் குண்டுவீச்சில் இறந்துவிட்டனர். நானும் பிறிதொரு மகனுமே தற்போது உள்ளோம். எனக்கு நட்டஈடு வேண்டும்” என்று அந்த தந்தை சாட்சியமளித்தார்.

Related Posts