Ad Widget

ஒரு வருடமாக வீதியில் தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நேற்றயதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப்போராட்டம் 334 ஆவது நாளாக தொடரும்நிலையில், சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘தமிழரின் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் உலகமே உருகவைத்த நாள் ஒரு வருடம் நிறைவு, ஸ்ரீலங்காவினால் தமிழர்களுக்குத் தீர்வைத்தர முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திய நாள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதையை தாங்கி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் காணாமல் ​போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் எனக்கோரி கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாகவந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக உண்ணாவிரதம் இருந்து வந்த காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு சுழற்சிமுறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts