Ad Widget

ஒரு நாடு! ஒரு ஜனாதிபதி! இரண்டு பிரதமர்கள்!!

இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயாளர் கடிதம் ஒன்றை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42(4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “குறிப்பாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன். இது தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்வற்கான நடவடிக்கையயும் எடுத்துள்ளேன். அத்துடன் இது தொடர்பானதொரு விரிவானதொரு விளக்கத்தை நாளைய தினம் அறிவிப்பேன்” என சபாநாயகர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்த அழுத்கமகே என்பவரே இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரச ஸ்தாபனங்களிற்கும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை தொடர்ந்து உருவாகியுள்ள குழப்பநிலைக்கு மத்தியில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர சற்று முன்னர் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

இதேவேளை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது. நாட்டின் அரசியலில் இன்று ஏற்பட்ட பிரதமர் மாற்றத்தையடுத்து குறித்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல சென்ற பின் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts