Ad Widget

ஒரு நாடு இருதேசம் -அர்த்தமற்ற கொள்கை! – சிவிகே காட்டம்

இருதேசம் ஒரு நாடு என்பது ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்றகோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது.

எனினும் இந்த விடயத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பிரித்தானிய குடியேற்ற நாடுகள் மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது.

இந்தக் காலத்தில் தந்தை செல்வநாயகமும் காங்கிரசிலேயே இருந்தார். மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் சட்ட சபையுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தகுந்த மாற்றுமுறை இல்லாத படியால் நாங்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்னைய உரிமை கோருகின்றோம் என்று எழுதினார்.

இதில் ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்து இன்றுவரை இலங்கை தமிழரசுக்கட்சியாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் இறுக்கமாக வலியுறுத்தப்பட்டே வருகிறது.

அதன் காரணமாகவே சமஷ்டி முறையிலான ஆட்சி முறையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். அடுத்து சுயநிர்ணய உரிமை பற்றிய இந்தக் கோரிக்கையை அரசியல் ரீதியாக முதன்முதலில் முன்வைத்தவர் அமரர் ஜி.ஜி பொன்னம்பலம். ஆனால் அவர் சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கே உரியது என்று கூறினார். அனால் அவர் எச்சந்தர்பத்திலும் தமிழ்த் தேசத்துக்கு சுய நிர்ணய உரிமை கோருவதாக சொல்லவில்லை.

1966 டிசம்பர் 19ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் எற்றுக்கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயத்தின் முதலாவது உறுப்புரை மக்களே சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று கூறுகிறது. ஆகவேதான் நாங்கள் எமது தலைவர்களான தந்தை செல்வா , அமரர் அமிர்தலிங்கம், சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை போன்றவர்களின் கருத்தின் அடிப்படையிலும் தந்தை செல்வா 1973ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 04ம் திகதி இன்டர்நைசினல் கமிசன் ஒப் ஜீரிஸ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் இலங்கையில் மொழியால், கலாச்சாரத்தால், பாரம்பரியத்தால், வரலாற்றால் வேறுபட்ட இரண்டு தனித்துவமான தேசிய இனங்கள் வாழ்வதை வலியுறுத்தி வருகிறோம். அதனடிப்படையிலேயே தமிழ்த்தேசிய இனமென்ற மக்கள் குளாத்துக்கே சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை தெளிவுபடத் தெரிவித்து வருகிறோம்.

தேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு சமனான தமிழ் சொல் நாடு என்பதாகும் நாடு என்றால் கன்றி என ஆங்கிலத்தில் கூறப்படும். ஆகவே இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசமாகும்.எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தி விடுதலைப்புலிகளின் இயக்கத்தினதும் எமது இனத்தின் வரலாற்று தலைவனுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம். இப்பொழுதும் அழைக்கின்றோம். தேசத்தின் தலைவர் என்று அழைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றவேண்டும் என்பதும் எமது கட்சியை மட்டும் கண்டனம் செய்வதுமே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினது அரசியல் சித்தாந்தமாக உள்ளது. தென்னிலங்கை கட்சிகளையோ சிறிலங்கா அரசையோ எம்மைக் கண்டிப்பது போன்று கண்டிக்காமல் நல்ல பிள்ளைத்தனமான அரசியலை இவர்கள் முன்னெடுக்கின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழரசு கட்சியினதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை ஓய்வூதியக்காரர்கள் என்றும் இவர்கள் கூறுகின்றனர். எம்மைப் போன்ற ஒய்வூதியர்கள் மிகவும் கடினமாக உழைத்த பின்னே ஓய்வூதியத்தை பெறுகின்றோம். ஆனால் இந்தக் கட்சியின் தலைவர்களோ 2004ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரைவாசிக் காலத்தில் அதிலும் ஆயுதப் போரட்டம் உக்கிரமடைந்து தமிழினம் இழப்புக்களைச் சந்தித்த காலத்தில் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு விடுதலைப் புலிகள் இருந்த போதும் நாட்டுக்குத் திரும்பாதவர்கள். புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்த பின்பு நாட்டுக்கு திரும்பி வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் பெறுகின்ற இளம் ஓய்வூதிய சமூதாயமாகவே இவர்கள் உள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் என எல்லா தேர்தலில் பங்குபற்றி உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டு மென்பதால் தலைவர்கள் மட்டும் போட்டியிடும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பங்குபற்றிக் கொண்டு உள்ளோராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைப் பகிஸ்கரிப்பதை கொள்கையாக கொண்டுள்ளனர் என்பது ஆழமாக கவனிக்கப்படல் வேண்டும். இவர்கள் கூறியபடி ஜனாதிபதித் தேர்தலைப் தமிழர்கள் பகிஸ்கரித்திருந்தால் இப்பொழுது மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருப்பார். அடுத்த ஏழுவருடத்திற்கு தமிழினத்தின் அடையாளத்தை அழித்திருப்பார் இதுதான் இவர்கள் பகிஸ்கரிப்பு லட்சணம் என்றார்.

Related Posts