Ad Widget

ஒரு தேர்தலுக்கு முன்பாவது எமது மக்களுக்கு இதைச் செய்தோம் என ஒன்றையேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கூற முடியுமா? – டக்ளஸ் தேவானந்தா

இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஒரு தேர்தலுக்கு முன்பாவது இதுவரையில் நாம் எமது மக்களுக்கு இதுவெல்லாம் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு கேட்கத் தகுதியில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி செய்வோம் என்று கூறியே தொடர்ந்தும் வாக்குகளைக் கேட்டு வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல், எமது மக்களை ஏமாற்றி, முடக்கி வைத்திருக்கவே முனைகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஈ.பி.டி.பியின் யாழ். தலைமை அலுவலகத்தில் வடமாகாண மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள்,

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பதாகவும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அவ்வப் பகுதிகளுக்கும் மக்களுக்கும் ஈ.பி.டி.பியினராகிய நாம் இதுவரையில் என்னென்ன செய்துள்ளோம் என்பதை பட்டியலிட்டுக் கூற முடியும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அவ்வாறு கூற முடியுமா? முடிந்தால் கூறட்டும் என நான் சவால் விடுகின்றேன்.

இதனால் தான் அவர்கள், அடுத்த தேர்தலுக்குப் பின்னர்தான் எல்லாம் சாத்தியம் என்றும், இனிமேல் தான் பிரச்சினைகளை ஆராய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூறிவருகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது இது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். தமிழ் மக்களின் பலத்தை மீண்டும் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றார்கள்.

சர்வதேசத்திற்கு இவர்கள் இதற்கு முன்னரும் பலதடவைகள் போயிருக்கிறார்கள் அப்போதெல்லாம் இலங்கை அரசாங்கத்துடன் பேசி தீர்வுக்கு வாருங்கள் என்றுதான் இந்தியப் பிரதமர் முதல், பிரித்தானிய பிரதமர் உட்பட அமெரிக்க ராஜாங்க செயலாளர் வரை கூறியிருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி புதிய அரசு அமைக்கப்பட்ட நிலையில், அதன் பலம் பொருத்திய தேசிய நிறைவேற்றுச் சபையில் பங்கெடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கு முன்னரே, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, சம்பூர் உட்பட வலிவடக்கு காணிகள் விடுவிப்பு, காணாமற் போனோரைக் கண்டறிதல் தொடர்பான நடவடிக்கை போன்ற சில விடயங்களையாவது செய்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அரசியல் பலம் இருந்தும், ஆற்றலும் விருப்பமும் அவர்களுக்கு இல்லை.

அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுப்பில் இருக்க வேண்டும். எமது மக்களின் சொந்த நிலங்கள் விடுபடக்கூடாது, காணாமற் போனோரின் உறவுகள் தொடர்ந்தும் அலைந்து திரிய வேண்டும். இவைதான் கூட்டமைப்பினரின் விருப்பங்கள். அப்படி இருந்தால்தான் தங்களால் தொடர்ந்து அரசியல் நடத்த முடியும் என கூட்டமைப்பினர் எண்ணுகிறார்கள் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts