Ad Widget

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் பெற்றோர் என்பது சரியா தவறா?

மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

2mother

மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி செய்யும் பேட்டரிகளைப் போன்றவை. செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை அளிப்பது தான் இவற்றின் முதன்மையான பணி.

மனித செல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கருமுட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப்போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும்.

சிலபெண்களின் கருமுட்டைகளில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோகாண்ட்ரியாக்கள் இருக்கும் கருமுட்டையில் இருந்து உருவாகும் குழந்தைகளின் செல்களில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அது அந்த குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அளவுக்கு மோசமான மரபணு நோய்களை உண்டாக்கும்.

இயற்கையின் இந்த மோசமான சிக்கலுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார்கள். இந்த மரபணு மருத்துவ தீர்வு பல கட்டங்களில் நடக்கிறது.

இதன் முதல்கட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டையில் இருக்கும் சேதமடைந்த மைடோகாண்ட்ரியாக்களை அகற்றிவிடுவது. அந்த கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து, வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து பாதிக்கப்படாத ஆரோக்கியமான மைடோ காண்ட்ரியாக்களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது. இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை, முதல் பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்துவது மூன்றாவது கட்டம். இதன் நான்காவது கட்டம் என்பது, இப்படி ஒரு பெண்ணின் நியூக்ளியஸையும், மற்ற பெண்ணின் மைடோகாண்ட்ரியாக்களையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த கருமுட்டைக்குள் விந்தணுவை சேர்த்து கருவுறச்செய்வது.

இந்த நடைமுறையையே கொஞ்சம் மாற்றி, மைடோகாண்ட்ரியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொண்டிருக்கும் பெண்ணின் கருமுட்டைக்குள் இருக்கும் நியூக்ளியஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த முதல் பெண்ணின் நியூக்ளியஸை பதியவைத்து அந்த கருமுட்டையை கருவுறச்செய்யும் நடைமுறையும் செய்யப்படுகிறது.

இப்படி இரண்டுவிதமாக செய்யப்படும் நடைமுறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பிறக்கவைக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் சோதனைச் சாவடியில் விலங்குகளைக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக மனிதர்கள் மத்தியில் இந்த பரிசோதனைகளை நடத்த உலக நாடுகளின் அரசுகள் எவையும் இதுவரை அனுமதியளிக்கவில்லை.

அப்படியான சட்டரீதியிலான அனுமதியை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது.

இந்த விஞ்ஞான முயற்சியின் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் சென்னையில் இருக்கும் செட்டிநாடு மருத்துவமனையின் இனப்பெருக்கத்துறையின் தலைமை மருத்துவர் என் பாண்டியன்.

மைட்டகொண்ட்ரியா நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து மோசமாக பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த மருத்துவ முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார் பாண்டியன்.

இந்த நடைமுறையை மூன்று பெற்றோருக்கான குழந்தை என்பதாக இதை சொல்வதே தவறு என்று கூறும் பாண்டியன், இதில் ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொடுப்பவரின் குழந்தையாக இதை கருத முடியாது என்றும் கூறினார். சாதாரணமாக ரத்த தானம் செய்வதைப் போலத்தான் இவர் மைடோகாண்ட்ரியாக்களை தானம் செய்கிறார் என்றும், எனவே பிறக்கும் குழந்தையானது அவரது மரபணுக்கூறுகளை கொண்டிருக்காது என்றும் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த குழந்தையின் தோற்றம் உள்ளிட்ட அனைத்துவகையான மரபணுக்கூறுகள் அனைத்துமே அதனது கருமுட்டையின் நியூக்ளியசை கொடுத்த உண்மையான தாய் மற்றும் அதை கருவுறக்காரணமான விந்தணுவைக் கொடுத்த தந்தையிடம் இருந்து மாத்திரமே வருவதால் இந்த குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்பது தவறான கருத்து என்றும் பாண்டியன் கூறினார்.

Related Posts