Ad Widget

ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதிக்கத்தில் தீவக மக்கள் அடக்கப்பட்டிருந்தனர்! -விந்தன்

யாழ். தீவுப் பகுதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு தரப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப் பகுதியில் தீவகத்தில் கல்வி, விளையாட்டு, பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாய் இருந்தது. – இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.

vinthan-kanakaraththinam

ஊர்காவற்றுறை தம்பாட்டி காந்திஜீ சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜீ விளையாட்டுக் கழகமும் காந்திஜீ சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய தீவக பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வுருமாறு:-

நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு தீவகப் பிரதேசத்துக்கு நாங்கள் பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதேச நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு அரசதரப்பும் அரச ஆதரவு குழுக்களும் பல்வேறு விதத்தில் நெருக்கடிகளை விளைவித்து வருகின்றன.

25 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த வடக்கு மாகாணம் முப்பது வருட போரை சந்தித்த மாகாணம். வடக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கியதாக பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது அரசு. இன்றுடன் வடக்கு மாகாணசபையை நாங்கள் பொறுப்பெடுத்து ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருடத்தில் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது என அறிக்கைகள் விடுகின்றார்கள் அரச தரப்பினர்.

கூட்டமைப்பு உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டிகளையும் ஒட்டுகின்றார்கள். மாகாணசபையில் முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு வருடமொன்றுக்கு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியாக முதல்வருக்கு ஆறு மில்லியன் ரூபாவும், அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து மில்லியன் ரூபாவும், உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி ஊடாக மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான, சுயதொழில்களுக்கான உதவிகள், மாகாணத்தில் உள்ள வீதிகள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், முன்பள்ளிகள், இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் போன்ற எத்தனையோ விடயங்களுக்கு நாம் நிதி ஒதுக்கி நாட்டுக்கும் மக்களுக்கும் எம்மால் முடிந்த சேவையை செய்துவந்துள்ளோம்.

மாகாண நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம் போன்றவை பெரும் இழுபறியின் பின்பு ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இதிலிருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தியும் மக்களுக்கும் நாட்டுக்கும் எம்மால் சேவை செய்ய முடியும்.

தீவகத்தில் கூட்டமைப்பினராகிய எம்மை ஏதாவது ஒரு பொது நிகழ்வுகளுக்கு இங்குள்ளவர்கள் அழைத்தால் உடனே ஒரு கும்பல் சென்று அவர்களை நோக்கி யாரைக்கேட்டு அழைத்தீர்கள் இவர்களை எல்லாம் நீங்கள் அழைக்கக்கூடாது எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களைத்தான் அழைக்க வேண்டும் என கடுந்தொனியில் எச்சரிக்கின்றார்கள்.

இவர்களின் இத்தகைய செயல் ஜனநாயக மரபுகளை மீறும் செயல் மட்டுமல்ல அரசியல் பண்பும் நாகரீகமும் தெரியாதவர் மேற்கொள்ளும் செயலாகும். எமக்கு எதிராக அறிக்கைகள் விடலாம் சுவரொட்டிகள் ஒட்டலாம் இந்தச் சலசலப்புகளுக்கு எல்லாம் நாம் அஞ்சப்போவதில்லை. மக்களும் இதை கண்டுகொள்வதுமில்லை கணக்கெடுப்பதுமில்லை.

நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நெருப்பாற்றை கடந்து வந்தவர்கள். மக்களுக்கான எமது பணியினை கண்டு ஜீரணிக்க முடியாதவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியும் அறிக்கைகள் விட்டும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தலாம் ஆனால் மக்களுக்கு எம்மை பற்றியும் தெரியும்.- என்றார்.

இந்த பரிசளிப்பு விழாவுக்கு விளையாட்டுக் குழுத் தலைவர் அ.கனகையா தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உபதலைவர் அல்பிரட், தீவக உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் பீற்றர் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Related Posts