Ad Widget

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது – சிறீதரன்

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மிக முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் இந்த சபையிலே பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.

மகிந்த தேசப்பிரிய தலைமையிலே தேர்தல் ஆணைக்குழு மிக நீதியாக, நேர்மையாக இந்த நாட்டிலே நடந்திருப்பதாகத்தான் பல்வேறுபட்ட தகவல்களும் ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான இந்த ஆய்வு நடவடிக்கைகளின் போது தான் இன்று யாழ்ப்பாணத்தில் கூட தேர்தல் நடைபெறுகின்ற காலத்திலேயே ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுக்கென நிவாரணமாக வழங்கப்பட வந்த பொருட்களை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் யாழ்ப்பாண செயலகத்திலே வைத்து வழங்கியிருந்தார்.

அதனை வெளியிலே கொண்டுவந்தது தேர்தல் ஆணைக்குழு, குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த இரட்ணஜீவன் கூல் தான் அதனை வெளிப்படையாக வெளியிலே சொல்லி இருந்தார்.

இதனைவிட ஒரு நியாயபூர்வமான, நீதியான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக நீண்ட கால அனுபவம் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையிலே குறித்த குழு மிக நேர்மையாக, நேர்த்தியாக செயற்பட்டிருந்தது. அதனை யாருமே இந்த இடத்தில் நாவடிக்கமுடியாது.

இங்கே நான் சில உறுப்பினர்களுடைய கருத்துக்களை செவிமடுத்தேன் இரட்ணஜீவன் கூல் மீது ஒரு தனிப்பட்ட கோவம் அல்லது அவர் மீது ஆத்திரம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.

இரட்ணஜீவன் கூல் இந்த தேர்தலிலே ஊழல் நடைபெறக்கூடாது, நியாயத்துக்கு புறம்பாக ஊழல் நடைபெறக்கூடாது, ஊழல் வாதிகளை அல்லது இந்த மக்களை ஏமாற்றுகின்றவர்களை நிராகரியுங்கள் என்று அவர் சொல்லியிருந்தால் அது நியாயமானது. ஆனால் தேர்தலிலே வாக்களிக்கவேண்டும் என்று அவர் மக்களை எந்த காலத்திலுமே எங்குமே அவர் சொன்னதாக நான் அறியவில்லை.

அப்படி சொல்லியிருந்தால் இந்த உயர்ந்த சபையின் ஊடக நீங்கள் வெறுமனே பொய்களை சொல்வதை விட அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் ஆணைக்குழு அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இவ்வளவு காலங்களும் நடைபெற்ற விடயங்களிலே தேர்தல் ஆணைக்குழு அவரை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

அவருடைய செயற்பாடுகளை மதித்திருக்கின்றது. அவருடைய எண்ணங்களுக்கு இசைந்து போய்த்தான் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஆகவே அவர் சரியாக நடந்திருக்கிறார், அவர் சரியாக நடந்த காரணத்தினால் தான் பல்வேறுபட்ட நபர்களுடைய ஊழல்களையும், அவர்களுடைய ஒழுக்கமற்ற நடவடிக்கைகளையும் அவர் வெளியிலே கொண்டுவந்திருந்தார்.

அவர் மிக உயர்ந்த ஒரு பேராசிரியர். அவர் உலக ரீதியிலே போற்றப்படுகின்ற ஒரு கல்விமான், அவ்வாறான ஒருவர் தமிழராக இந்த தேர்தல் ஆணைக்குழுவிலே அவர் இருந்திருக்கிறார் என்பதுதான் நான் நினைக்கிறேன் சில உறுப்பினர்களுக்கு மிகக்கூடிய வேதனையாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒரு உயர்ந்த கல்விமானை அவ்வாறு ஒரு தேர்தல் ஆணைக்குழுவிலே வைத்திருந்தது அவர்களுக்கு பிரச்சனையாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்த நாட்டிலே இந்த தேர்தல் முறையிலே பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஒரு கட்சிக்குள்ளேயே பல பேர் சூடுபட்டிருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள். விருப்பு வாக்குகளுக்காக பலர் கோடிக்கணக்கிலே செலவழித்திருக்கிறார்கள்.

இங்கே இந்த பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய உறுப்பினர் சொன்னார், இந்த தேர்தல் முறையிலே இனிமேல் பணமில்லாதவன் மக்களுக்காக சேவை செய்ய முடியாது, பணமில்லாதவன் இந்த தேர்தலிலே ஈடுபட முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது உண்மையான ஒரு விடயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த நாட்டிலே பணமிருந்தால் மட்டும்தான் தேர்தலிலே காசுகளை கொட்டி அல்லது சாராய போத்தல்களை இறக்கி தேர்தலிலே வெல்ல முடியும் என்பதை பலர் நிரூபித்திருக்கிறார்கள்.

இன்று யாழ்ப்பாணம் அரச செயலகத்தை தன்னுடைய சொந்த அரசியல் செயலகம் போன்று மாற்றியிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறுதான் நடந்துகொண்டார் என்பதற்கு பல்வேறுபட்ட உதாரணங்கள், செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதனை விசாரிப்பதற்கு இந்த நாட்டிலே யாருமில்லை. ஊழல் நடந்ததை சொல்வதற்கு திராணியில்லை.

குறிப்பாக நீங்கள் பாருங்கள் இந்த நாட்டிலே ஒருபக்கம் அரசாங்கத்தினுடைய ராஜபக்ச குடும்பத்தினுடைய உறுப்பினர்கள் ஆட்சியிலே இருக்கிறார்கள். அதே நேரம் யாழ்ப்பாணத்திலே இப்பொழுது யாழ்ப்பாண அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற போர்வைலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையிலும் அரச செயலகம் இன்று ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இது மிக மோசமானதொரு நடவடிக்கை. இதனை சொல்லுவதற்கு திராணியில்லாதவர்கள் அதனை சொன்ன இரட்ணஜீவன் கூல் மீது நீங்கள் ஏன் கோவம் கொள்கிறீர்கள்? தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நியாயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நடைபெறுகின்ற உண்மைகளை மறைக்காமல் நீதியான வழியிலே ஒரு தேர்தல் நடைபெற வேண்டும், நீதியான முறையிலே இந்த நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் முதலிலே உங்களுக்கு வரவேண்டும். நாங்கள் எதையும் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. எதனையும் நாங்கள் இனவாத ரீதியாக சிந்திக்க கூடாது.

இரட்ணஜீவன் கூல் ஒரு தமிழன் என்பத்திற்காக அவர் தன்னுடைய நியாயங்களை சொன்னதற்காக அவர் மீது இங்கு பலர் வசைமாரிகளை பொழிந்தீர்கள்.

ஆனால் அவருடைய கல்வி தன்மை, அவரிடம் உள்ள ஆற்றல், அவருக்கு இருக்கிற ஆங்கில அறிவும், அவரிடம் உள்ள கெட்டித்தனத்தையும், நீங்கள் முதல் மதிக்கப்பழகுங்கள்.

அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல .அவர் தமிழர்களுக்கு சாதகமாக இருந்தாரா? பாதகமாக இருந்தாரா? என்பதல்ல ஆனால் இந்த சபையிலே ஒரு தமிழன் தூற்றப்படுகின்ற பொழுது, பிழை இல்லாமலே பிழை சொல்லப்படுகின்ற பொழுது நாங்கள் பேசாமல் இருப்பதும் ஒரு காலத்தின் தவறு. ஆகவேதான் நான் இந்த பதிவை மேற்கொள்கிறேன்.

அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே, முதல் நீங்கள் உண்மையை புரிந்து நேர்மையின் பக்கம் கதைத்தவர்களை, எவர் சொல்லும் கருத்துக்களிலும் பிழை இருந்தாலும் அந்த உண்மைகளையும் இந்த இடங்களிலே சொல்வதற்கு நீங்கள் தயங்கக்கூடாது.

உண்மையில் இரட்ணஜீவன் கூல் பிழை செய்திருந்தால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாக அவர் அதனை சொல்லியிருக்க வேண்டும்.

சொல்லாத இடத்திலே இந்த சபையிலே இரட்ணஜீவன் கூல் இல்லாத இடத்திலே அந்த பேராசிரியரை பற்றி நீங்கள் பேசுவது உங்களுடைய தகுதியை உங்கள் இனத்தினுடைய தன்மையை நீங்கள் குறைப்பதாக அமையும்“ எனக் குறிப்பிட்டார்.

Related Posts