Ad Widget

ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தேவையில்லை – சிவஞானம்

உள்ளூராட்சி மன்றங்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியொன்று இருக்கவில்லை. அவ்வாறு இருப்பது உள்ளூராட்சி தத்துவதற்கு மாறானது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை மட்டும் அழைப்பது பொருத்தமானது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

CVK-Sivaganam

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துவது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு, கடந்த 10 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே சிவஞானம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் முரண்பாடுகளுடன் கூடியதும் குழுவின் கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சம்பவங்களை கொண்டதாக அமைந்தமை மனவருத்தத்துக்குரியது.

2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற கைகலப்புச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
பங்குபற்றுபவர்களின் பெயர் பட்டியல் முறையாக அமையாததே இந்த அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகின்றது. பங்குபற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சம்பந்தமாகவே குழப்பம் காணப்படுகின்றது.

அழைக்கப்படும் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதிகாரிகள் அசௌகரியத்துக்கு உள்ளாவது காணப்படுகின்றது. சிரேஷ்ட அதிகாரிகளை மட்டும் அழைப்பது தொடர்பில் பரிசீலிக்கவேண்டும். அழைக்கப்படுவர்களுக்கான வசதிகள் வழங்கப்படவேண்டும்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் விடயத்திலும் கவனம் செலுத்தப்படவேண்டும். தொடர்ந்தும் இயங்கிச் சேவையாற்றும் நிறுவனங்களுக்கே அழைப்புக்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். பெயரளவு அழைப்புக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

முறைப்படி அழைக்கப்பட்டவர்களே மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவேண்டும். ஒழுங்குநெறிமுறை ஓரளவு திருப்திகரமாக கடைப்பிடிக்கப்படுவதை குறிப்பிடுதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts