Ad Widget

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

tnaயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தப்படுவதன் காரணமாக அதனைப் புறக்கணிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் மாவை.சேனாதிராசா யாழ். மாவட்ட அரச அதிபருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தில், கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவார் என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின் மாகாண சபை முதலமைச்சர், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

முதலமைச்சருடன் மேற்படி கூட்டம் பற்றியோ, பொருத்தமான திகதி பற்றியோ எதுவும் பேசப்பட்டிருக்கவில்லை. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தக் கூட்டம் தொடர்பில், சென்ற கூட்டக் குறிப்புகள் எமக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. தாங்கள் எமக்கு அனுப்பிய கூட்ட அறிவித்தலில் கூட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினராகிய எம்முடன் அல்லது வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்து பேசப்படாமல் மேற்படி கூட்டத்துக்கு அறிவித்தமையானது, அறிவித்தல் கொடுத்தவர்களின் தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

எனவே நாம் மேற்படி கூட்டத்தில் பங்குபற்ற மாட்டோம் என்பதைத் தெரியப்படுத்துவதுடன், இந்தக் கூட்டத்தைப் பிற்போடுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் தொடர்புகொள்வதற்காகப் பலமுறை முயற்சித்த போதும், தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதேவேளை, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான இணைத் தலைமை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இதுவரை எந்தவொரு அறிவித்தலையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்துக்கு தலைமை வகிப்பவர்கள் யார் என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதுவரை காலமும் இணைத் தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுமே செயற்பட்டு வந்தனர்.

தற்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு வடக்கு முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இணைத் தலைவர்களில் ஒருவராக முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், இன்னமும் அந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Posts