Ad Widget

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி – பல குடும்பங்கள் நிர்க்கதி!

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மினிசூறாவளியினால் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் ஆகிய கிராமங்களும், புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராமமும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி தூரத்தே வீசப்பட்டமையினாலும், மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மக்கள் சேமித்து வைத்திருந்த நெல் மூடைகள், பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகள், அத்தியாவசிய வீட்டு ஆவணங்கள் பதிவு பத்திரங்கள், உடுபுடைவைகள், உணவுப்பொருள்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

வீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீட்டு கட்டுமாணத்துக்கு அரிந்த சிமெந்து கற்களும் மழை நீரில் கரைந்து போயுள்ளன. பயன்தரு நிலையிலிருந்த வாழை மரங்களும் முறிந்து போயுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து இன்று சனிக்கிழமை காலை அப்பகுதிகளுக்கு சென்று அனர்த்த நிலைமைகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் அவலநிலை காணப்படுவதாகவும், ஆகையால் அவசர உதவிகளாக தறப்பாள்களையும், உலர் உணவுகளையும் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பிரதேச செயலகம், தமது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக முடிந்தவரையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

oddusuddan-1

oddusuddan-2

oddusuddan-3

Related Posts