Ad Widget

ஐ.நா.வை வெளியேற்றி தமிழர்களை கொன்றீர்கள்! – ஜெனீவாவில் வாக்குவாதம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் சிங்கள பிரதிநிதிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மக்களுக்கு எதிராவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய சிங்கள பிரதிநிதிகள், உலக சாசனத்தின் 23/1ஐ ஐ.நா. மீறியுள்ளதென குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. கொண்டுவந்த தீர்மானம் செல்லுபடியற்றதென, அமர்வில் கலந்துகொண்டிருந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ்சுமத்தியுள்ளார். குறித்த தீர்மானத்திற்கு எதிராகவே இலங்கை மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிப்போரில் தாம் மக்களை காப்பாற்றியவர்கள் என்றும், ஆனால் அதற்கெதிராகவே ஐ.நா. செயற்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றை செவிமடுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியான மணிவண்ணன், ”மக்களை காப்பாற்றியதாக குறிப்பிடும் நீங்கள், மக்கள் வாழ்விடங்களிலும் வைத்தியசாலைகள் மீதும், தாக்குதல் நடத்தப்படாதென பிரகடனப்படுத்திய வலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தினீர்கள்? ஐ.நா.வை யுத்தப் பகுதியிலிருந்து வெளியேற்றிவிட்டே இவ்வாறு தாக்குதல் நடத்தினீர்கள். லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த பகுதியில், மக்களின் எண்ணிக்கையை குறைவாக குறிப்பிட்டு குறைவான உணவையே அனுப்பினீர்கள். இவ்வாறெல்லாம் செய்துவிட்டு மக்களை காப்பாற்றியதாக எவ்வாறு கூறுவீர்கள்? இப்போதும் எதற்காக ராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளீர்கள்” என சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

இவற்றிற்கு பதிலளிக்க முடியாமல் சிங்கள பிரதிநிதிகள் தடுமாறியதாகவும், சுதாகரித்துக்கொண்டு பதிலளிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,

Related Posts