Ad Widget

ஐ.நா. விசாரணை அறிக்கை; யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.இராஜகுமாரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால விடுதலை போராட்டத்தில் பல உயிர்களை பறி கொடுத்து பல இழப்புக்களை சந்தித்துள்ளோம்.
இறுதிப் போரின்போது உச்சக்கட்டமாக மனித உரிமை மீறல் இனப்படுகொலைகள் நடைபெற்றன.

விடுதலைப்போராட்டம் ஒடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

அது நடைபெறவில்லை இருப்பினும் சர்வதேச நாடுகள், எமது புலம்பெயர் உறவுகளின் அழுத்தத்தால், உண்மையான அக்கறையால் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். ஐக்கியநாடு சபையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் நடவடிக்கைகள் பற்றி விசாரணை மேற்கொண்டு அதற்கு ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசாரணை மிக கடினமான நிலையில் இடம்பெற்றது. சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருந்தார்கள். இப்பொழுதும் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த விசாரணை முடித்து எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

விசாரணை முடிவின் மூலம் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குற்றங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டு அதற்கு நீதி கிடைக்கும் என்பதை எமது மக்கள், புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் என பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

அநீதிக்கு நீதி காணப்பட வேண்டும். அதற்கு முக்கியமானதாக போர்குற்ற விசாரணை அறிக்கை பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இலங்கையின் தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை தாமதப்படுத்துவதற்காக பலர் முயற்சிக்கின்றார்கள் என்பதை இன்று நாம் அறிகின்றோம். அதன்படி தாமதிக்கப்பட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும் என்பது போல தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்காமல் போய்விடும்.

எனவே அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பது எமக்கு தெரியாது. ஆனால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதை அறிய ஆவலாக உள்ளோம். தீர்வை எதிர்பார்திருக்கின்றோம்.

இந்த அறிக்கை கட்டாயமாக மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலே சமர்ப்பிக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, கனடா போன்ற நாடுகளை நாம் கோருகின்றோம்.

நடத்தவுள்ள இப் பேரணி ஊடாக விசாரணை அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஏனைய வெளிநாட்டு தூதரகங்களுக்கும் மகஜர் ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளோம்.

இப்பேரணியில் ஈழத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரின் ஆதரவையும் பல்கலைக்கழக சமூகம் எதிர்பார்க்கின்றோம்.
இது தொடர்பாக வடமாகாணத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 11 மணிக்கு யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதில் அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts