Ad Widget

ஐ.நா.விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடக் கோரி பல்கலை. சமூகத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று மாபெரும் பேரணி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது.

uni

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் அமைப்புகள் ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்தப் பேரணி ஒழுங்குகள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

பேரணி காலை சரியாக 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகும்.

சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை இவ்வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் காலை 8.30 மணிமுதல் வைக்கப்பட்டிருக்கும்.

இதில் ஒவ்வொரு பொது அமைப்பின் சார்பாகவும் ஒவ்வொருவர் ஒப்பமிடலாம். உங்களிடம் இறப்பர் முத்திரை இருந்தால் கொண்டு வருதல் நல்லது.

முதலில் பரமேஸ்வரன் கோவிலுக்கு முன்பாகவுள்ள வெளியில் ஒன்றுகூடுவோம். மதத் தலைவர்கள் பேரணியை வழிநடத்திச் செல்வார்கள்.

அவர்களின் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பொதுஅமைப்புக்கள் என்ற ஒழுங்கில் இருவர் இருவராகச் செல்வோம்.

இப்பேரணியின் தொடக்கத்தில் மட்டும் ஒரேயொரு பதாகை மட்டும் கொண்டுசெல்லப்படும். தொடக்கத்திலோ அன்றி இடையிலோ வேறெந்த பதாகையும் அனுமதிக்கப்படமாட்டாது.

சுலோக அட்டைகள் ஒருங்கமைப்பாளர்களால் எழுதப்பட்டவை மட்டுமே கொண்டுசெல்லப்படும். வேறெந்த சுலோக அட்டைகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

பேரணியின்போது துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.

கட்சிக்கொடிகள், பொது அமைப்புக்களின் பதாகைகள், அடையாளங்கள் போன்றவை அனுமதிக்கப்படமாட்டா. பேரணி, இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை அடைந்து கந்தர்மடம் சந்தியில் திரும்பி நல்லூர் கோவிலின் வடக்கு வீதியை அடையும். அங்கு அமைப்புக் குழுவின் தலைவர் மட்டும் சிறுஉரை ஆற்றிய பின்னர் மகஜர் கையளிக்கப்படும்.

பின்னர் அனைத்து அன்புள்ளம்கொண்ட மனித உரிமை ஆர்வலர்களும் அமைதியாகக் கலைந்து செல்வோம். எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கோருவோம். அணி அணியாய் ஒன்றுதிரள்வோம். ஈழத் தமிழினம் உணர்வுகளை இழக்கவில்லை என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். காப்போம் தமிழ்த் தேசியம். ஈழத்தமிழ் உறவுகளின் ஆதரவை நாடி நிற்கிறோம் – என்று யாழ்.பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.

Related Posts