Ad Widget

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் அனுமதியில்லை

unஇலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதா, நுழைவிசைவு வழங்குவதா, உள்நாட்டில் பல பகுதிகளுக்கும் செல்ல ஆவன செய்து கொடுப்பதா போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் வெகுசன தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம்.ஜே.சாதிக்.

இலங்கைக்கான ஐ.நா. விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சண்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் ஏனைய அங்கத் தவர்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இந்தநிலையில் இக்குழுவினர் இலங்கை வருவதற்கு விண்ணப்பித்தால் நுழைவிசைவு வழங்குவீர்களா என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு அப்போதே முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டது. அந்தவகையில் தீர்மானத்தின் விளைவாக முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச விசாரணைப் பொறிமுறையையும் பக்கச்சார்புடையதும் முன்கூட்டியே முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டதான இறுதி முடிவுகளை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்.

இந்நிலையில் ஐ.நா. விசாரணைக் குழுவினரை நாட்டுக்குள் அனுமதிப்பதா, நுழைவிசைவு வழங்குவதா, அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஆவன செய்துகொடுப்பதா என்ற கேள்விகள் எழுவதற்கே இடமில்லை. ஏனென்றால் ஏற்கனவே நாம் அந்த நடவடிக்கையை பூரணமாக நிராகரித்துவிட்டோம். ஐ.நா. தீர்மானம் கடந்த மார்ச்சில் நிறைவேற்றப்பட்டவுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அம்பாந்தோட்டையில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது, ஜெனிவாத் தீர்மானத்தின் விளைவாக ஐ.நா. விசாரணைக்குழு இலங்கை வர விண்ணப்பித்தால் அதற்கு அனுமதி வழங்குவீர்களா என்ற வினவிய போது, அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

ஐ.நா விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார்

Related Posts