Ad Widget

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: இரா.சம்பந்தன்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் அரசின் செயற்பாடுகள் காரணமாகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.

உள்ளகப் பொறிமுறையும் இழுத்தடிக்கப்பட்டு வந்ததன் காரணமாகவே 2015 இலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசுக்கு மீண்டும் தற்போது காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு அதை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதை எவ்வாறு உரியவகையில் நிறைவேற்றுவது என்பது பற்றி சிந்தித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். எமது நாடு பேரழிவுமிக்க நிலைமைகளை சந்தித்துள்ளது.

நாம் அந்த நிலைமையில் இருந்து மீள வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முழுமையானதும் துரிமானதூமான அமுலாக்கம் அந்த பாதை நோக்கிய முதலாவது படியாக இருக்கும். இந்த நடவடிக்கையில் இடம்பெறக்கூடிய தாமதமோ அல்லது மறுப்போ எமது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பாகவே அமையும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts